
தனது துணிக்கடையில் வேலை பார்த்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ, புகைப்படம் எடுத்து மீண்டும் மீண்டும் மிரட்டி பாலியல் சித்ரவதை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் சூரஜ் திவாரி(23). துணிக்கடை உரிமையாளரான இவருக்கு 2021-ம் ஆண்டு சமூகவலைதளம் மூலம் 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, தனது கடைக்கு வேலைக்கு ஆள் தேவையென்றும், அதற்கான ஆளைத்தேடுவதாகவும் சிறுமியிடம் சூரஜ் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த சிறுமி, சூரஜ் திவாரி துணிக்கடையில் விற்பனையாளராக வேலைக்குச் சேர்ந்துள்ளார். அவரை சூரஜ் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அதை புகைப்படம், வீடியோக்களாக எடுத்துள்ளார். இவற்றைக் காட்டியே அந்த சிறுமியை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அவரின் சித்ரவதை தாங்க முடியாமல் துணிக்கடையில் இருந்து 2022-ம் ஆண்டு சிறுமி வேலையை விட்டு நின்றுள்ளார். ஆனாலும், சிறுமியின் வீட்டிற்குச் சென்று புகைப்படம், வீடியோக்களைக் காட்டி மிரட்டி தனது கடைக்கு வருமாறு சூரஜ் திவாரி மிரட்டியுள்ளார். இதனால் கடைக்குச் சென்ற சிறுமியை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சில நாட்களுக்குப் பின் ஆட்டோவில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த சிறுமியை வழிமறித்து சூரஜ் திவாரி மிரட்டியுள்ளார். ஆபாச படங்களைக் காட்டி இவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடப்போகிறேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலைத் தாங்க முடியாத சிறுமி, லக்னோவின் ஆஷியானா காவல் நிலையத்தில் சூரஜ் திவாரி மீது புகார் செய்தார். இதையடுத்து சூரஜ் திவாரி மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து ஆஷியானா காவல் நிலைய அதிகாரி அஜய் மிஸ்ரா கூறுகையில், “இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சூரஜ் திவாரி மீது ஐபிசி 376, 323, 504 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார். சிறுமியை பல ஆண்டுகளாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.