கோவையில் ரவுடியை கொன்றது சீன துப்பாக்கி; பல லட்சம் கொடுத்து வாங்கிய கும்பல்: போலீஸ் அதிர்ச்சி தகவல்

 ரவுடி சத்திபாண்டி
ரவுடி சத்திபாண்டி கோவையில் ரவுடியை கொன்றது சீன துப்பாக்கி; பல லட்சம் கொடுத்து வாங்கிய கும்பல்: போலீஸ் அதிர்ச்சி தகவல்

கோவையில் ரவுடியை சுட்டுக்கொன்ற கும்பல் சீன நாட்டு துப்பாக்கி பயன்படுத்தியது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரை மாவட்டம், ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் சத்திபாண்டி(31). இவர் காட்டூரில் நடந்த கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இவர் தொடர்ந்து அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்தநிலையில், கடந்த மாதம் 12-ம் தேதி 5 பேர் கும்பல் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் சத்திபாண்டியை கும்பல் கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக போலீஸார் தீத்திபாளையம் சேர்ந்த காஜா உசேன் (24), மணிகண்டன் (25), செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சஞ்சய் குமார் (23), அல்ஜபீர் கான், நாகர்கோவிலை சேர்ந்த சஞ்சய்ராஜா ஆகிய 6 பேரை கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளனர்.

இதில், முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராஜாவை விசாரிக்க கோரி கோவை நீதிமன்றத்தில் போலீஸார் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை தனி இடத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சத்திபாண்டியை கொலை செய்ய ஒரு துப்பாக்கி பயன்படுத்தியதும், அந்த கும்பலிடம் மேலும் ஒரு துப்பாக்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த துப்பாக்கி சீன நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதும், சில லட்சங்கள் செலவழித்து இடைத்தரகர்கள் மூலம் இந்த துப்பாக்கியை கொலை கும்பல் வாங்கியதும் தெரியவந்துள்ளது. மேலும் துப்பாக்கி எப்படி கொண்டுவரப்பட்டது? பின்னணியில் உள்ளவர்கள் யார்? என சஞ்சய் ராஜாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீஸார் 2 துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கோவையில் ரவுடிசத்தை ஒழிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை 56 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்ற செயல்களில் ஈடுபடுவோர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ரத்தினபுரி ரவுடி கவுதம் மீது கொலை முயற்சி, அடிதடி, கஞ்சா உள்ளிட்ட 27 வழக்குகள் உள்ளன. 7 பிடிவாரன்டுகள் உள்ளன. 2 தனிப்படை போலீஸார் அவரை தேடி வருகின்றனர். விரைவில் பிடிபடுவார். மேலும் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டிருந்த ரவுடிகளின் இன்ஸ்டாகிராம் பக்கங்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in