பேருந்து படியில் யார் நின்று செல்வது?; சரமாரியாக மோதிக் கொண்ட மாணவர்கள்: போலீஸ் காட்டிய அதிரடி

பேருந்து படியில் யார் நின்று செல்வது?; சரமாரியாக மோதிக் கொண்ட மாணவர்கள்: போலீஸ் காட்டிய அதிரடி

திருக்கோவிலூர் அருகே  பேருந்து படியில் தொங்கி செல்வதில் தகராறு ஏற்பட்டு பள்ளி மாணவர்கள் குழுவாக தாக்கிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய  நிலையில்  பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது எடப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 24-ம் தேதி மாலை திருக்கோவிலூரில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற தனியார் பேருந்தில், பேருந்தின் படிக்கட்டில் தொங்கிச் செல்வது தொடர்பாக எடப்பாளையம் மற்றும் அதன் அருகாமையில் உள்ள எல்ராம்பட்டு ஆகிய இரு கிராம மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து இன்று காலை எடப்பாளையத்தில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த பேருந்தில் பயணித்த  எல்ராம்பட்டைச் சேர்ந்த  ராஜேஷ் மற்றும் விஜய் ஆகிய இரு  மாணவர்களையும் பேருந்தில் இருந்து இறக்கிய மாணவர்கள் உள்ளிட்ட  9 பேர்  சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இது குறித்து அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த  திருக்கோவிலூர் போலீஸார், மோதலில்  ஈடுபட்டவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.  படிக்கட்டில் தொங்கியது தொடர்பாக இருதரப்பு மாணவர்களுக்கும்  இடையே முன்விரோதம் இருந்ததும், அதன் காரணமாக 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவன் உட்பட 9 பேர் இணைந்து எல்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கியதாக கூறியுள்ளனர். இதன் அடிப்படையில்   வழக்குப் பதிவு செய்து  போலீஸார் சபீர் அகமது என்பவரை கைது செய்து பிணையில் விடுவித்தனர். மேலும் தப்பி ஓடிய பள்ளி மாணவர்கள் உட்பட எட்டு பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in