தேர் கவிழ்ந்த விபத்து
தேர் கவிழ்ந்த விபத்து

பதற வைத்த பிரகதாம்பாள் கோயில் தேரோட்ட விபத்து: வெள்ளோட்டம் பார்க்காத இருவர் மீது வழக்கு

புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் தேரோட்டத்தில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் இரண்டு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள பிரகதம்பாள் உடனுறை திருக்கோகர்னேஸ்வரர் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்றது. முதல் சப்பரத்தில் விநாயகரும், இரண்டாவது சப்பரத்தில் முருகனும், மூன்றாவது தேரில் பிரகதம்பாளும், நான்காவது தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளிருந்தனர்.

தேரோட்டம் தொடங்கி நடைபெற்ற நிலையில் சில அடி தூரம் சென்றதும் பிரகதாம்பாள் எழுந்தருளியிருந்த தேர் எதிர்பாராத விதமாக முன்புறமாக சாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தேருக்கு அடியில் ஐந்து பேர் சிக்கிக் கொண்டனர். மேலும் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து உடனடியாக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா ஆகியோர் விபத்துக்குள்ளான தேரைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேரில் இருந்த சுவாமி சிலைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கோயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டன. கவிழ்ந்த தேரும் நிமிர்த்தி சரி செய்யப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டு காலமாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்தாண்டு தேரோட்டத்துக்கு முன்பாக வெள்ளோட்டம் பார்த்து தேர்முறையாக உள்ளதா என்று ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாததால் இந்த விபத்து நேர்ந்திருக்கிறது. அதனால் தேரை வழி நடத்தும் பொறுப்பில் இருந்த ரவிச்சந்திரன், வைரவன் ஆகிய இரண்டு பேர் மீது திருக்கோகரணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in