கலெக்டர் முன்னிலையில் பெண்ணுக்கு ஆபாச அர்ச்சனை, மிரட்டல்: அய்யாக்கண்ணு மீது பாய்ந்தது வன்கொடுமை வழக்கு

ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கு.
ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பெண்ணிடம் தகராறு செய்ததாக விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பேசியதால் பெண் விவசாயி கௌசல்யா என்பவர் ஆட்சேபம் தெரிவித்தார்.

அதற்கு அந்த  பெண் விவசாயியை அய்யாகண்ணு மற்றும் அவரது ஆதரவாளர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியும், அடிக்கவும் முயன்றனர். இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முன்பு நடந்ததால் காவல்துறையினர் தலையிட்டு தமிழக விவசாயிகள் சங்க மகளிர் அணி தலைவி கௌசல்யாவை கூட்ட அரங்கில் இருந்து வெளியேற்றினர். 

அய்யக்கண்ணு
அய்யக்கண்ணு

கௌசல்யாவை அய்யாக்கண்ணு மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரக்குறைவாக ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியதற்கு பிற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் குறைதீர் கூட்டம் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கூட்டத்திலிருந்து வெளியேறிய கௌசல்யா நீதிமன்ற காவல் நிலையத்தில் அய்யாக்கண்ணு மீது புகார் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட  நீதிமன்ற காவல் நிலைய போலீஸார்,  அய்யாக்கண்ணு மீது  பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in