வரதட்சணை டார்ச்சரால் பிரிந்து சென்றார்; தீபாவளிக்கு வந்த மனைவி மீது தாக்குதல்: கணவர், இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

மயிலாடுதுறையில் இளம்பெண்ணை தாக்கியதாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் மீது  பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே செருதியூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மகள் அபிராமி (25). மயிலாடுதுறை மூங்கில்தோட்டம் கன்னித்தோப்புத் தெருவைச் சேர்ந்த விஜயேந்திரன்-புஷ்பவல்லி தம்பதியினரின் மகன் வினோத்குமார் என்பவரை 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின்  கணவர் வினோத்குமார், மாமியார் புஷ்பவல்லி மற்றும் குடும்பத்தினர் அபிராமியை அடிக்கடி வரதட்சணை கேட்டு   கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

இதனால், வினோத்குமாரை பிரிந்த அபிராமி  சென்னையில்  தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவருகிறார்.  தீபாவளிக்காக கடந்த வாரம் மயிலாடுதுறைக்கு வந்தவரை சந்தித்த  வினோத்குமார், அபிராமியை  தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். 

அபிராமி மறுப்பு தெரிவித்ததால் கணவன், மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து வினாத்குமார் அவரது தாயார் புஷ்பவல்லி,  புஷ்பவல்லியின் நட்பில் உள்ள நாகை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு  காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், புஷ்பவல்லியின் மருமகன் கார்த்திக், மகள் திவ்யா ஆகிய 5 பேர் அபிராமியிடம் தகராறு செய்தார்களாம். அத்துடன் வரதட்சனை கேட்டு தாக்கியதாகவும்  மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அபிராமி புகார் அளித்தார். 

இந்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸார், வினோத்குமார், காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் மீதும்  பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம்,  உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மயிலாடுதுறை, மணல்மேடு காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளராக பணியாற்றியவர். அவர் மீது  பெண்ணை  மிரட்டியதாக  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மயிலாடுதுறை  காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in