உதவிக்கேட்டு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: விசிக வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளரை தேடும் போலீஸ்

காசி சிவகுருநாதன்
காசி சிவகுருநாதன்

கணவரை பிரிந்து வாழும் இளம்பெண் ஒருவர்,  தென்காசி மாவட்ட விடுதலை சிறுத்தைகள்  கட்சியின்  வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது தென்காசி பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி மாவட்டம், வீரசிகாமணி அருகே அருணாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி சிவகுருநாதன் ( 39). இவர் அரியநாயகிபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்காசி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். 

பிரிந்து வாழும் தனது கணவருடன் தன்னை  சேர்த்து வைக்கக்கோரி அருகில் உள்ள ஒரு ஊரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இவரிடம் முறையிட்டிருக்கிறார்.  அவருக்காக புளியங்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சிவகுருநாதன் உதவியாக சென்று  இருக்கிறார். அதனைத் தொடர்ந்து அடிக்கடி விசாரணைக்காக அந்த இளம்பெண்ணுடன் புளியங்குடி சென்று வந்திருக்கிறார். 

இந்த நிலையில் அந்த பெண் சேர்ந்தமரம் காவல்நிலையத்தில் சிவகுருநாதன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.  மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று வரும்போது காசி சிவகுருநாதன் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும், சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும்  அந்த பெண் புகாரில்  தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சேர்ந்தமரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் விசாரணை நடத்தி, வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.  சிவகுருநாதனை போலீஸார்  தேடி வருகின்றனர்.

உதவி கேட்டு வந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த விசிக பிரமுகரின் செயல்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in