தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்ததால் காரில் இருந்தவர்கள் இறங்கி தப்பியோடியதால் உயிர்தப்பிய சம்பவம் மேல்மருவத்தூர் அருகே நடைபெற்றுள்ளது.
தாம்பரம் சேலையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா அசோக். இவரது தாயார் சித்ரா, தங்கை கிரிஜா மற்றும் மைத்துனர் ஆகாஷ் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மேல்மலையனூர் கோயிலுக்குக் காரில் சென்றனர்.
சாமி தரிசனம் முடிந்து சென்னை திரும்பும் போது மேல்மருவத்தூர் அருகில் காரில் இருந்து புகை வந்தது. இதையடுத்து கார் ஓட்டுநர் நிறுத்தி சோதனையிட்ட போது காரில் தீப்பிடித்து இருப்பது தெரிய வந்தது. உடனே காரில் இருந்தவர்களை இறங்கி செல்லுமாறு அவர் கூறியுள்ளார். அதன் பேரில் ராஜா அசோக் உட்பட அனைவரும் தப்பியோடியுள்ளனர்.
சற்றும் எதிர்பாராத நிலையில் மளமளவென தீ கார் முழுவதும் பரவி கார் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடுரோட்டில் கார் எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.