
கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் சந்தை அருகில் பூட்டிய வீட்டில் இருந்து அண்ணன், தங்கைகள் உள்பட மூவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குமரி மாவட்டம், திங்கள்சந்தை அருகில் உள்ள தாத்தவிளை பகுதியைச் சேர்ந்தவர் பாபு(46). பெயிண்டராக இருந்துவந்தார். இவருக்கு உஷா தேவி, ஸ்ரீதேவி என இரு சகோதரிகள் உள்ளனர். மூவரும் இந்த வீட்டில் சேர்ந்து வசித்து வந்தனர்.
இந்தநிலையில் பாபு வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இரணியல் போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாபு ஒரு அறையிலும், இரு சகோதரிகளில் ஒருவர் சமையல் அறையிலும் தூக்கிட்டு இறந்துகிடந்தனர். இன்னொரு சகோதரி படுத்ததுபோல் இறந்துகிடந்தார். இவர்கள் மூவரின் உடலும் அழுகிப் போய் துர்நாற்றமும் வீசியது.
இவர்கள் மூவருக்கும் திருமணமும் ஆகவில்லை. கடைசியாக கடந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டு உரிமையாளருக்கு வாடகை கொடுக்க பாபு வெளியில் வந்தார். அதன் பின்னர் அவரை வெளியில் பார்க்க முடியவில்லை. இந்தநிலையில் தான் அவர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதிவாசிகள் கொடுத்தத் தகவலின் பேரில் இரணியல் போலீஸார் வீட்டுக்குச் சென்றனர். மூவரின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து இரணியல் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.