பீர் பாட்டிலால் தாக்கி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் கொலை: சண்டையை விலக்கச் சென்றவருக்கு நிகழ்ந்த சோகம்

பீர் பாட்டிலால்  தாக்கி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் கொலை: சண்டையை விலக்கச் சென்றவருக்கு நிகழ்ந்த சோகம்

திருச்சியில் மதுபானக்கூடத்தில் சண்டையிட்டவர்களை சமாதானம் செய்ய முயன்ற  இங்கிலாந்து குடியுரிமை பெற்ற இளைஞரை பாட்டிலால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சுப்பிரமணியபுரம் இளங்கோ தெருவைச் சேர்ந்தவர் சின்னத்துரை (46). இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ள இவர்  லண்டனில் பெட்ரோல் பங்க்கில்  பணியாற்றி வந்தார். லண்டனின் சம்பாதித்த பணத்தைக் கொண்டு திருச்சி  கிராப்பட்டி பகுதியில் புதிதாக வீடு கட்டி அதன் திறப்பு  விழாவுக்காக சில நாட்களுக்கு முன் திருச்சி வந்திருந்த அவர்  நவம்பர் மாதம்  லண்டன் திரும்ப திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் உலகநாதபுரம் பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடைக்கு நேற்று மது அருந்துவதற்காக சென்றிருந்தார்.  அங்கு ஏற்கெனவே மது குடித்து கொண்டிருந்த முடுக்குப்பட்டியை சேர்ந்த தர்மன், உலகநாதபுரத்தைச் சேர்ந்த சரவணன், திடீர் நகரைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 
அருகிலிருந்த  சின்னதுரை அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த  தர்மன், சரவணன்  ஆகியோர் சின்னதுரையிடம் தகராறில்  ஈடுபட்டனர். ஒருகட்டத்தில்  சராமாரியாக கைகளாலும், பீர் பாட்டிலாலும் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த சின்னதுரையை அங்குள்ளவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.  

இது தொடர்பாக சின்னதுரையின் மனைவி மதுமிதா அளித்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் போலீஸார், தர்மனை கைது செய்தனர். மேலும், இருவரை  தேடி வருகிறார்கள். லண்டன் குடியுரிமை பெற்ற இளைஞர் மதுபானக் கூடத்தில் சண்டையை விலக்கச் சென்றபோது தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in