
கோயில் கும்பாபிஷேகத்தின்போது நடத்தப்பட்ட வானவேடிக்கையில் வெடிகள் விழுந்து வெடித்ததில் மூன்று பேர் பலத்த காயமடைந்த நிலையில் 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே அரசலூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதற்காக மேளதாளங்கள், சிறப்பு வானவேடிக்கை உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் வான வேடிக்கை நடத்தப்பட்டது.
அப்போது எதிர்பாராத விதமாக வெடிகள் பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதில் திருச்சி மாவட்டம் சிக்கத்தம்பூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சுரேஷ் (36), திருச்சி மாவட்டம் சோபனாபுரத்தைச் சரவணன் மனைவி பிரியா (21) ஆகிய இருவருக்கும் முதுகு புறத்தில் காயம் ஏற்பட்டது. அரசலூர் ராஜ்குமார் மகன் லலித் என்ற ஏழு வயது சிறுவனுக்கு தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அதையடுத்து அவர்கள் மூவரும் ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுய நினைவு இழந்த சிறுவன் லலித் மருத்துவமனையில் உயிரிழந்தான்.
அவனது உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த இருவரும் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோயில் விழாவில் நடத்தப்பட்ட வானவேடிக்கையில் சிறுவன் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அரும்பாவூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.