நிழற்குடைக்காக தோண்டப்பட்ட பள்ளம்: தேங்கிய தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி

நிழற்குடைக்காக தோண்டப்பட்ட பள்ளம்: தேங்கிய தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி

பேருந்து நிறுத்தம் கட்டுவதற்காக சாலையோரம் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீரில் விழுந்து 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விருத்தாசலம் – உளுந்தூர்பேட்டை இடையே  சாலை விரிவாக்க பணி கடந்த ஓராண்டாக நடக்கிறது. அதில், விஜயமாநகரம் பேருந்து  நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிக்காக கடந்த சில வாரங்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரமாக பெய்து வரும் கனமழையினால், அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.   

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் புதுவெண்ணைக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி. இவரது மகன் வினோத் (11) 4-ம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் இன்று மாலை அவ்வழியாக சென்ற சிறுவன் வினோத், கால்தவறி விஜயமாநகரம் பேருந்து நிறுத்தத்தில்  இருந்த பள்ளத்தில் விழுந்தார். அதனால் நிலைகுலைந்த அவர் அதில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி  பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர், சிறுவனின் உடலை மீட்டனர். அதுகுறித்த  தகவலறிந்து சென்ற மங்கலம்பேட்டை போலீஸார் சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், பயணியர் நிழற்குடை அமைக்க பள்ளம் தோண்டி பல நாட்கள் ஆகியும், பணி கிடப்பில் போடப்பட்டதால், சிறுவன் இறந்ததாக கூறி, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று மாலை விருத்தாசலம் –  மங்கலம்பேட்டை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகலறிந்து சென்ற ஏ.எஸ்.பி., அங்கித் ஜெயின் தலைமையிலான போலீஸார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பயணியர் நிழற்குடை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் சிறுவன் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in