
சைதாப்பேட்டையில் கருணை இல்லத்திற்கு உணவு சமைத்த போது கேஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் படுகாயமடைந்தனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை சைதாப்பேட்டை திவான் பாஷ்யம் தெருவில் நேற்று மதியம் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சிலர் கருணை இல்லம் ஒன்றிற்கு உணவு அளிப்பதற்காக சமைத்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சமையல் கூடத்தில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், சைதாப்பேட்டை ஜோன்ஸ் தெருவை சேர்ந்த வனிதா(38), ஆட்டோ டிரைவர் புண்ணியகோடி(46), நித்யா(35), வாட்ச்மேன் ஆறுமுகம் (42) மற்றும் கொருக்குப்பேட்டையை சேர்ந்த பாதிரியார் நித்தியானந்தம்(32) ஆகிய 5 பேர் காயமடைந்தனர். உடனே அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் கிண்டி, மாம்பலம் பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக சைதாப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக 5 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் வனிதா, புண்ணியகோடி ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். விபத்து குறித்து சைதாப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 5 பேரை இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.