
சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்த வங்ததேச வாலிபர் கோவை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவை விமானநிலையத்திற்கு இன்று காலை ஷார்ஜாவில் இருந்து விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பினர். அப்போது ஒரு வாலிபரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரது பாஸ்போர்ட், விசா, அடையாள அட்டை போன்றவற்றை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், அந்த வாலிபர் இந்திய அரசின் பாஸ்போர்ட்டை வைத்திருந்தார்.
அவற்றை ஆய்வு செய்த போது அந்த பாஸ்பார்ட் போலியாக தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. அந்த வாலிபரை பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் வங்கதேசத்தை சேர்ந்த அன்வர் ஹூசைன்(28), என்பதும், அவர் போலியான ஆவணங்களை கொடுத்து பாஸ்போர்ட் பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். அவர் எதற்காக கோவை வந்தார்? என்பது குறித்தும், இந்திய குடியுரிமை இல்லாத அவருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்தது யார்? என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.