காலாவதி தின்பண்டங்களை சாலையோரம் வீசிய பேக்கரி: ஆபத்தை அறியாமல் அள்ளிச்சென்ற சிறுவர்கள்!

காலாவதி தின்பண்டங்களை சாலையோரம் வீசிய பேக்கரி: ஆபத்தை அறியாமல் அள்ளிச்சென்ற சிறுவர்கள்!

கன்னியாகுமரி மாவட்டம், கண்ணனூர் பகுதியில் காலாவதியான பேக்கரி பொருள்களை அதன் உரிமையாளர் சாலையோரம் வீசி சென்றார். ஆனால் அது காலாவதியானது என்னும் அபாயம் தெரியாமல் குழந்தைகள் பலர் அதைத் தூக்கிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரிமாவட்டம், கண்ணனூர் அருகில் உள்ள வீராலிகாட்டுவிளை பகுதியில் டெம்போ ஒன்றுவந்தது. அது சாலையோரத்தில் காலாவதியான பேக்கரிப் பொருள்களைக் கொட்டிவிட்டு விரைந்து சென்றது. சாலையோரம் பிஸ்கட், கேக் உள்ளிட்டப் பொருள்கள் கிடப்பதைப் பார்த்து அந்த பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் அதை ஆர்வமுடன் எடுத்துச் சென்றனர். வீட்டில் அவர்களது பெற்றோர் அது காலாவதியானது என்பதைப் பார்த்து அதிர்ந்தனர்.

இதுகுறித்துக் கேள்விப்பட்டதும் கண்ணனூர் ஊராட்சிமன்றத் தலைவர் ரெஜினி விஜிலாபாய் தலைமையில் பொதுமக்கள் அங்கு திரண்டனர். அப்போது அதே டிம்போ மீண்டும் காலாவதியான பொருள்களைக் கொட்டவந்தது. உடனே பொதுமக்கள் டிம்போவுடன் சுற்றிவளைத்தனர். டிம்போ டிரைவரிடம் நடத்திய விசாரணையில் வேர்கிளம்பி பகுதியில் உள்ள பேக்கரிகடை ஒன்றில் இருந்து காலாவதியானப் பொருள்களைக் கொட்டுவதற்காக கொடுத்து அனுப்பியதாகத் தெரியவந்தது. இதுகுறித்து கண்ணனூர் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இதுகுறித்து, உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.

பேக்கரி உரிமையாளரிடம் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கண்ணனூர் ஊராட்சி சார்பில் காலாவதியான பொருள்களைச் சாலையில் கொட்டிய பேக்கரி கடைக்கு 2,100 ரூபாய் அபாரதம் விதிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகள் வரை பழைய பேக்கரி பொருள்களை இவ்வளவு நாள்கள் கடையில் இருப்பு வைத்திருந்தது ஏன்? காலாவதிப் பொருள்களைத் திறந்த நிலையில் கொட்டியது ஏன்? என்பது உள்பட பல்வேறு கேள்விகளுக்கும் விளக்கம் கேட்டு உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பேக்கரி உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in