தாய் - சேய் உடன் செவிலியர்
தாய் - சேய் உடன் செவிலியர்

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி; சாதுரியமாக செயல்பட்ட செவிலியர்: 108 ஆம்புலன்ஸிலேயே குழந்தை பிறந்தது

பிரசவத்துக்காக பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற 108 ஆம்புலன்ஸிலேயே அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயையும் சேயையும் சமயோசிதமாக செயல்பட்டு காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் ஆண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி அமுதா (30). நிறைமாத கர்ப்பிணி பெண்ணான அமுதாவிற்கு நேற்று நள்ளிரவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு சென்று சேர்த்தார் கணவர். அங்கு அவரை பரிசோதித்த செவிலியர் நித்தியா, அமுதாவை நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார்.

108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் ஓட்டுநர் இளங்கோவன் வாகனத்தை நாகப்பட்டினம் நோக்கி இயக்கிக் கொண்டிருந்தார். செவிலியர் ரம்யா வாகனத்தில் பணியில் இருந்தார். திருமருகல் அடுத்த திட்டச்சேரி அருகில் வந்தபோது, அமுதாவிற்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது சாதுர்யமாக செயல்பட்ட செவிலியர் ரம்யா, சிறிதும் தாமதிக்காமல் விரைந்து செயல்பட்டு 108 வாகனத்திலேயே அமுதாவிற்கு பிரசவம் பார்த்துள்ளார்.

சில நிமிடங்களிலேயே ஆம்புலன்ஸிலேயே அமுதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமுடன் உள்ளனர். நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அமுதா மற்றும் பிறந்த குழந்தை கொண்டுவரப்பட்டு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 108 வாகனத்திலேயே கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாய், சேயை காப்பாற்றிய செவிலியர் மற்றும் ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in