`என்னை கவனிக்க யாருமே இல்லையே'- புலம்பிய 61 வயது பிரான்ஸ்காரரை மணந்த 28 வயது புதுச்சேரி இளம்பெண்

`என்னை கவனிக்க யாருமே இல்லையே'- புலம்பிய 61 வயது பிரான்ஸ்காரரை மணந்த 28 வயது புதுச்சேரி இளம்பெண்

வெளிநாட்டில் வசிக்கும் புதுச்சேரியைச் சேர்ந்த 61 வயதான ஆண் ஒருவர், புதுவையைச் சேர்ந்த 28 வயது இளம் பெண்ணை திருமணம் செய்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரியை சேர்ந்த 61 வயது ஆண் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் குடி உரிமை பெற்று வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் தமது உறவினர்களை காண புதுச்சேரிக்கு வந்துள்ளார். அப்போது அவரை சந்தித்த உறவினர்களிடம் தனது மனைவி இறந்ததால் தனிமையில் வாடுவதாகவும், குடும்பத்தை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாமல் சிரமப்படுவதாகவும் புலம்பியுள்ளார்.

அதனையடுத்து அவரது உறவினர்கள் அப்பகுதியை சேர்ந்த கணவரை இழந்த 28 வயதான இளம் பெண்ணிடம் இது தொடர்பாக எடுத்துக் கூறினர். பிரான்ஸ் நாட்டு குடிமகனை பற்றி எடுத்துச் சொல்லி அவரை மறுமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைத்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோயிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தை வீடியோவாக எடுத்த சில நபர்கள் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. 28 ஐ மணந்த 61 என்ற தலைப்பில் இந்த வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த திருமணம் தொடர்பாக மணக்குள விநாயகர் கோயில் தரப்பில், "இருவரின் பெயர், எந்த ஊர் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. அவர்கள் மேஜரா என்பதை மட்டும் பார்த்தோம். மேலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள எம்எல்ஏ ஒருவரின் சிபாரிசு கடிதமும் பெற்று வந்தனர். அதனை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து வைத்தோம்" என்கிறார்கள்.

அந்த பெண், முதியவரை திருமணம் செய்து கொண்டு பிரான்ஸ் நாட்டில் செட்டில் ஆகலாம் என்பதற்காக அவரை திருமணம் செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு 2.5 கோடி ரூபாய் முதியவர் தரப்பிலிருந்து வழங்கப்பட்டதாகவும் உறுதி செய்யப்படாத ஒரு தகவல் பரப்பப்படுகிறது.

விருப்பப்பட்டு சென்றாரோ, விலைக்கு வாங்கப்பட்டாரோ ஆனால் 28 வயதே ஆன இளம்பெண் 61 வயது முதியவரை மணந்திருப்பது இளைஞர்கள் மத்தியிலும் முதியவர்கள் மத்தியிலும் ஒருசேர தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது சமூக வலைதளங்களின் மூலமாக தெரிய வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in