
சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குழி ஜே ஜே நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). கூலித் தொழிலாளியான இவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள பத்தாம் வகுப்பு பயிலும் 15 வயது சிறுமியை பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இவர் செய்யும் செயலை பார்த்து வெளியே சொன்னால் பெரியவர்களுக்குள் சண்டை வந்து விடுமோ என்று எண்ணி சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் 200 ரூபாய் பணம் தருவதாகவும் பின்பக்க வாசல் வழியாக வரும்படியும் கூறி நேற்று சிறுமியை அழைத்துள்ளார். இதில் பயந்து போன சிறுமி உடனடியாக தனது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீஸார் ராஜேந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து, விசாரணை நடத்தியபின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். 60 வயது முதியவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.