வெளிநாட்டிலிருந்து கன்னியாகுமரி வந்த 6 வயது குழந்தை மலேரியாவுக்கு பலி: பெற்றோர், சகோதரி அட்மிட்

வெளிநாட்டிலிருந்து கன்னியாகுமரி வந்த 6 வயது குழந்தை மலேரியாவுக்கு பலி: பெற்றோர், சகோதரி அட்மிட்

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு கிறிஸ்துமஸ் கொண்டாட வந்த பொறியாளரின், ஆறு வயது மகள் மலேரியாவால் உயிரிழந்தார். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறையினரும் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே உள்ள தூத்தூர் அல்போன்சா தெரு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நைஜீரியா நாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் கடந்த 30 ஆண்டுகளாக அங்கு தங்கியிருந்து பணியாற்றி வருகிறார். அவ்வப்போது விடுமுறைக்கு மட்டுமே ஊருக்கு வருவது வழக்கம்.

அண்மையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக சமீபத்தில் பொறியாளர் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊர் வந்திருந்தார். இந்தநிலையில் அவருடைய 6 வயது பெண் குழந்தைக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் திடீரென அதிக காய்ச்சலால் அந்த குழந்தை பாதிப்புக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அங்கு பரிசோதனை செய்ததில் அந்த குழந்தைக்கு மலேரியா காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அதற்கான சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.

இந்த சோகம் ஆறுவதற்குள் பொறியாளரின் 9 வயது மகளும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பின்னர் பொறியாளர் மற்றும் அவருடைய மனைவியும் பாதிப்புக்கு ஆளாகினர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கும் மலேரியா காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும் அதிக பாதிப்பு இல்லாததால் அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதைத்த மலேரியாவால் ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் உயர் அதிகாரிகளுக்கு தெரிய வரவே, பொறியாளர் குடும்பத்தினர் தங்கிய வீட்டின் அருகில் உள்ளோருக்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்தனர். ஆனால் இதில் யாருக்கும் மலேரியா பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் சுகாதாரத்துறையினர் முழு வீச்சில் பணிசெய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in