செயற்கை சுவாசத்தின் உதவியுடன் தேர்வு எழுதிய 50 வயது பெண்: கேரள எழுத்தறிவு இயக்கத்தின் அடுத்தப் பாய்ச்சல்!

செயற்கை சுவாசத்தின் உதவியுடன் தேர்வு எழுதிய 50 வயது பெண்: கேரள எழுத்தறிவு இயக்கத்தின் அடுத்தப் பாய்ச்சல்!

கேரளத்தில் செயற்கை சுவாசத்தின் உதவியுடன் பெண் ஒருவர் தனித்தேர்வு எழுதிய சம்பவம் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், வைக்கப்ரயார் பகுதியைச் சேர்ந்தவர் சிமிமோள்(50). இவர் கடுதுருத்தி பகுதியில் உள்ள புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு நிலையிலான தனித்தேர்வு எழுதினார். தீவிரமான நுரையீரல் அழற்சியினால் பாதிக்கப்பட்டிருக்கும் சிமிமோள் செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியோடு இந்தத் தேர்வினை எழுதினார்.

சிமிமோளிற்காக ஒரு தனி அறை பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டு, அந்த அறையில் ஆக்சிஜன் செறிவூட்டப்பட்ட கலன்கள், சுவாசம் பெறுவதற்கான குழாய் ஆகிய வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. இந்த தனி அறையில் இருந்தவாறே சிமிமோள் தன் 12-ம் வகுப்பு நிலையிலான தனித்தேர்வை எழுதினார்.

இதுகுறித்து சிமிமோள் கூறுகையில், “என் அம்மா சரோஜினியும், தங்கை சினிமோளும் என் உணர்வைப் புரிந்துகொண்டு இந்தத் தேர்வினை எழுத பெரும் சிரமம் எடுத்து என்னை ஆம்புலன்ஸில் அழைத்துவந்தனர். முதலில் அவர்களுக்கு நன்றியை சொல்லிக் கொள்கிறேன். என் கணவர் ஜோதிராஜ் இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மூன்றாண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துபோனார். அவரது இறப்பிற்கு பின்பு எனக்கு நுரையீரல் பிரச்சினை வந்தது.

ஆக்சிஜன் சிலிண்டரின் உதவியுடன் தான் சுவாசிக்க முடியும். நான் அங்கன்வாடி மையத்தில் வேலைசெய்தேன். ஆனால் சுவாசப் பிரச்சினையின் காரணமாக அந்த வேலையை விட்டுவிட்டேன். என் ஒரே மகள் அம்ரிதா பல் மருத்துவம் பயின்று வருகிறார். எனக்கு தொடர்ந்து படிக்கவேண்டும் என்னும் ஆசை இருந்தது. கேரள எழுத்தறிவு இயக்கத்தின் வழியாகப் படிக்கத் தொடங்கினேன். எழுத்தறிவு இயக்கம் சார்பில் வைக்கத்தில் உள்ள பயிற்சி மையத்தில் ஒவ்வொரு வாரமும் போய்க் கற்றுவந்தேன். அந்தப் பயணமும் மிகவும் சவாலானது. தேர்வும் நன்றாக எழுதியுள்ளேன். முடிவுக்காக காத்திருக்கிறேன். தொடர்ந்து மேல்படிப்பு படிக்கவும் ஆசை இருக்கிறது” என்றார்.

ஏற்கெனவே கேரள மாநில எழுத்தறிவு இயக்கத்தின் மூலம் 105 வயதில் நான்காம் வகுப்புக்கு இணையான தேர்வெழுதி வென்ற கொல்லத்தைச் சேர்ந்த பாகீரதி, ஆழப்புழாவைச் சேர்ந்த 96 வயதான கார்த்தியாயினி ஆகியோர் மத்திய அரசின் நாரிசக்தி புரஸ்கார் விருதினைப் பெற்றனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடியும் மனதின் குரல் நிகழ்ச்சியில் இவர்களைப்பற்றிப் பேசினார். இந்நிலையில் கேரள எழுத்தறிவு இயக்கத்தின் அடுத்த பாய்ச்சலாக ஆக்சிஜன் உதவியுடன் தேர்வெழுதிய சிமிமோள் கொண்டாடப்படுகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in