விளையாடிய போது மழைநீர் வடிகால்வாயில் விழுந்த சிறுமி உயிரிழப்பு: விடுமுறை நாளில் நடந்த துயரம்

அக்ஷிதா
அக்ஷிதா

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தேங்கியிருந்த மழை நீரில் விழுந்து ஐந்து வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி அடுத்த எருக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். அவரது மகள்  அக்ஷிதா (5). அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய  தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறை நாளான நேற்று மாலையில்  வீட்டுக்கு வெளியே விளையாடிக்  கொண்டிருந்த சிறுமி, எதிர்பாராத விதமாக அங்கிருந்த  மழைநீர் வடிகாலில் தேங்கியிருந்த நீரில் தவறி விழுந்தார். 

இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து குழந்தையை தூக்கி, சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூச்சுத் திணறல்  ஏற்பட்டு சிறுமி பரிதாபமாக  உயிரிழந்தார்.  இது குறித்து கொள்ளிடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் உடல்  சீர்காழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த முதல்வர் ஸ்டாலின் சிறுமியின் குடும்பத்திற்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்ததுடன், 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார். ஒரே நாளில் பெய்த அதிக கனமழையின் விளைவாக சீர்காழி பகுதி முழுவதுமே மழைநீர் தேங்கியுள்ள நிலையில் எதிர்பாராத விதமாக எருக்கூர் கிராமத்தில்  சிறுமி மழை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in