பொதுமக்களால் தாக்கப்பட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு: குடும்பத்துடன் கோயிலில் திருடியதால் நடந்த விபரீதம்

பொதுமக்களால் தாக்கப்பட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு: குடும்பத்துடன் கோயிலில் திருடியதால் நடந்த விபரீதம்

புதுக்கோட்டை அருகே கோயிலில் திருடிய கும்பலை மக்கள்  விரட்டிச் சென்று  தாக்கியதில் படுகாயம் அடைந்த சிறுமி,  மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அண்டக்குளம் அருகே கிள்ளனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் உள்ள கோயில்களின் வெளிப்பகுதியில் இருந்த பித்தளைப் பொருட்கள் உள்ளிட்டவை அடிக்கடி  திருடு போனது. இந்தநிலையில்  கடந்த 14-ம் தேதியன்று கிள்ளனூரில் உள்ள கோயிலில் திருடிய  ஒரு கும்பல் ஆட்டோவில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்த  ஊர் மக்கள் ஆட்டோவை  விரட்டிச் சென்றனர்.

புதுக்கோட்டை மச்சுவாடிப் பகுதியில் ஆட்டோவை மறித்துப் பிடித்தனர்.  அதில் இருந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியநாராயணசாமி(48), அவரது மனைவி லில்லி புஷ்பா(38), மகள் கற்பகாம்பாள்(10) மற்றும் 3 மகன்கள் ஆகிய 6 பேரையும் அவர்கள் கடுமையாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர்களை  கணேஷ்நகர் காவல்துறையினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில், தலையில் காயம் அடைந்திருந்த சிறுமி கற்பகாம்பாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சிறுமி இறந்தது குறித்து கணேஷ் நகர் காவல் நிலையத்தில் கொலை வழக்காக  பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, கோயில்களில் திருடியதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து கீரனூர் மற்றும் உடையாளிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில் ஆட்டோவில் வந்தவர்கள் தான் அப்பகுதியில் கோயிலில் உள்ள பொருட்களை திருடியவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆட்டோவில் இருந்த பித்தளைப் பொருட்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in