5 ஆண்டுகள்; 97 தற்கொலைகள்!

போதையின் பிடியில் அழிகிறதா பொழியூர் கிராமம்?
5 ஆண்டுகள்; 97 தற்கொலைகள்!

கன்னியாகுமரி - கேரள எல்லையில் இருக்கிறது கேரளத்தின் பொழியூர் கிராமம். இயற்கை எழில் கொஞ்சும் இந்த சின்னஞ் சிறு மீனவ கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 97 பேர் தற்கொலை செய்துள்ளனர். மது, சமூகவலைதளங்கள், மனோதிடமின்மை ஆகியவையே இதன் பின்னணியில் இருக்கும் காரணம் என தகவல் வெளியாகி இருப்பது இன்னும் அதிரவைக்கிறது.

இரையுமன் சாகர்
இரையுமன் சாகர்

பொழியூரின் இந்தத் தாக்கம் குமரி மாவட்ட கடற்கரைக் கிராமங்களிலும் எதிரொலிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை மணி அடிக்கிறார் எழுத்தாளர் இரையுமன் சாகர். இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், “பொழியூர் கிராமத்தின் தொடர் தற்கொலைகளுக்கு போதைப் பொருள் பயன்பாடு தான் முக்கிய காரணமாக உள்ளது. ஒருகாலத்தில் பொழியூர் கிராமம் முழுவதுமே சாராயம் காய்ச்சுவதே தொழிலாக இருந்த பகுதி. கிறிஸ்தவ மீனவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஊர் இது. எனவே, மறைமாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி கள்ளச் சாராய அழிவிலிருந்து இந்த மக்களை மீட்டது. அவர்களுக்கு மாற்றுத் தொழில் வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். கள்ளச் சாராயம் காய்ச்சிய காலத்தில்கூட இத்தனை பேர் அங்கு மரணிக்கவில்லை. ஆனால், இப்போது தடையின்றிக் கிடைக்கும் போதைப்பொருட்களால் இந்தகைய அவலத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

பொழியூரில் மட்டுமல்ல... குமரி மாவட்ட கடலோர கிராமங்களிலும் போதைப் பொருட்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. அலையோடு போராடி களைத்த மீனவன் முந்தைய காலங்களில் கள் மற்றும் நாட்டுச் சாராயம் குடித்து அலுப்பை மறப்பான். அதுகூட சாதாரணமான ஒன்றுதான். அப்போதெல்லாம் இளைஞர்கள் இதைத் தவிர எந்தப் போதைக்கும் அடிமையானது இல்லை.

ஆனால் இப்போது, கடலோர கிராமங்களில் படித்த இளைஞர்களே கஞ்சா, ஹெராயின் போன்ற கொடிய போதை பொருட்களுக்கு அடிமையாகி வருகிறார்கள். அதே போன்று, பாம்பை கடிக்கவிட்டு போதை ஏற்றிக்கொள்ளும் விநோதமான விஷப் பரிட்சையிலும் சிலர் ஈடுபடுகிறார்கள். கடலோர கிராமங்களின் இளைஞர்களிடம் கையில் தாராள பணப் புழக்கம் இருப்பதால் போதைப்பொருள் மாஃபியாக்கள் இவர்களைக் குறிவைத்து பணம் சம்பாதிக்கிறார்கள்.

போதைக்கு அடிமையாவதால் பல இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பும் பாதிக்கப்படுகிறது; குடும்பங்களும் சீர்குலைகிறது. இதையெல்லாம் பல பெற்றோர்கள் வெளியே சொல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். பலர், தங்கள் பிள்ளைகளின் கதிக்கு போதைதான் காரணம் என்பதை அறியாமலும் இருக்கின்றனர். அதனால் தான் உயிர்ப் பலிகள் கூடிக்கொண்டே போகிறது. அண்டை மாநிலமாக இருப்பினும் எங்கள் சகோதர கிராமமாக திகழும் பொழியூரில் இத்தனை தற்கொலைகள் நடந்திருக்கும் செய்தி நெஞ்சைப் பதறவைக்கிறது. இதை இப்படியே விட்டால் நாளைக்கு இந்தத் தற்கொலைகள் தமிழக கிராமங்களிலும் நடக்கும் என்பதால் அரசு இப்போதே உஷாராக செயல்பட்டு போதைப் பொருட்கள் ஊடுருவும் வழிகளைக் கண்டுபிடித்து அடைக்க வேண்டும்.

திருவனந்தபுரம் வழியாக வரும் போதை பொருட்கள் விழிஞ்ஞம், பூவார் என பயணித்து பொழியூர் வருவதாக சொல்கிறார்கள். அதுவேதான் குமரி கடற்கரைகளிலும் ஊடுருவுகிறது. போதை மாஃபியாக்கள் இங்குள்ளவர்களுக்கு போதைப் பொருட்களை சப்ளை செய்வதோடு மட்டுமில்லாது அவர்களை தங்களின் வியாபாரத்துக்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சிலரை பணத்தாசை காட்டி கடத்தலுக்கும் பயன்படுத்துகின்றனர். அண்மையில் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை குமரி மீனவர்கள் சிலர் மீன்பிடி படகில் கடத்திய சம்பவமே அதற்கு சாட்சி.

தனி நபரோ அல்லது மீனவர் நலன்சார்ந்து இயங்கும் அமைப்புகளோ இதைத் தடுக்க முயன்றால் மோசமான பின்விளைவுகளைச் சந்திக்கக்கூடும் என்பதால் பலரும் அஞ்சுகின்றனர். இத்தனை தற்கொலைகள் நிகழ்ந்த பிறகு பொழியூரில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆக்‌ஷனில் இறங்கி இருக்கிறார்கள். அதேபோல் குமரி கடலோர கிராமங்களிலும் போதை தடுப்பு அதிகாரிகள் இப்போதே களத்தில் இறங்க வேண்டும். போதைபொருள் சப்ளை செய்யும் மாஃபியாக்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை தாமதிக்காமல் செய்யாவிட்டால் பொழியூரின் நிலை குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களுக்கும் பரவுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றார்.

பிடிபட்ட கஞ்சா பொட்டலங்கள்...
பிடிபட்ட கஞ்சா பொட்டலங்கள்...

பொழியூரின் தொடர் தற்கொலைகள் குறித்து அந்த ஊரின் அருட்பணியாளர் ஜேக்கப் ஸ்டெல்லஸிடம் பேசினோம். “ நான் இங்கு பங்குத் தந்தையாக வந்தே ஆறுமாதங்கள்தான் ஆகிறது. அதற்குள்ளேயே 25 வயதுடைய இரண்டு பெண்களும், 45 வயதுடைய இரண்டு ஆண்களும் தற்கொலைக்கு தங்களின் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இதில், இளம் வயது பெண் பிள்ளைகளின் தற்கொலைகளுக்கு சமூகவலைதளம் மூலமாக மலரும் காதலே பிரதான காரணமாக இருக்கிறது. எனினும் பெரும்பாலான தற்கொலைகளுக்குப் பின்னால் மது உள்ளிட்ட போதை வஸ்துகள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. போதை பழக்கத்துக்கு அடிமையாகும் ஆண்களால் குடும்ப வன்முறையும் அதிகம் நடக்கிறது. எந்த விதத்திலாவது போதைக்கு அடிமையானவர்கள் சின்னச் சின்னப் பிரச்சினைகளைக் கூட சமாளிக்கமுடியாமல் தற்கொலைக்குத் துணிந்துவிடுவதும் வேதனையளிக்கும் விஷயம்” என்றார் அவர்.

பொழியூர் அரசுப்பள்ளியின் ஆசிரியரான டெரன்ஸ் ஃபெர்ணான்டஸிடம் பேசினோம். “எங்கள் பள்ளியில் மிகவும் ஆக்டீவாக இருந்த மாணவி ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்டார். பள்ளிக்கு வெளியே சக மாணவர் ஒருவருடன் அவர் தனியே நின்று பேசியதாக ஊருக்குள் ஒரு தகவல் பரவியது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார். அந்த சோகத்திலேயே இருந்த அந்த மாணவனும் அடுத்த சில நாட்களில் தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் இன்னொரு மாணவரும் தற்கொலை செய்துகொண்டார். இவர்கள் மூவருமே ஆக்டீவாக இருந்தவர்கள். எதுவாக இருந்தாலும் எங்களிடம் தைரியமாகப் பேசுபவர்கள். அப்படிப்பட்டவர்கள் ஏன் தற்கொலைக்குத் துணிந்தார்கள் என்று தெரியவில்லை” என்றார் அவர்.

பொழியூர் கிராமத்தின் தொடர் தற்கொலைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க திருவனந்தபுரம் மாவட்ட நிர்வாகம் குழு ஒன்றை அமைத்திருக்கிறது. இந்தக் குழுவினர் இப்போது பொழியூர் கிராமத்தில் முகாமிட்டு பல்வேறு தரப்பினரிடமும் பேசிவருகிறார்கள். இவர்கள் தரும் அறிக்கையும் அதன் மூலம் அரசு எடுக்கப்போகும் நடவடிக்கைகளும் இந்த கிராமத்தின் தற்கொலைச் சாவுகளுக்கு முடிவுரை எழுதட்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in