
வேப்பூர் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆடுகள் மீது அரசுப்பேருந்து மோதியதில் ஆட்டின் உரிமையாளரும், அவருக்கு சொந்தமான 96 ஆடுகளும் நடுங்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் மகன் லெட்சுமணன். இவர் கடந்த இருபது ஆண்டுகளாக கடலூர் மாவட்டம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, பகுதியில் தனது செம்மறி ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். நேற்று இரவு எலவசனூர் கோட்டையில் இருந்து தனது ஆடுகளை ஓட்டிக்கொண்டு திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். ஆடுகள் முன்னே செல்ல தனது இரு சக்கர வாகனத்தில் அவர் பின்னே வந்து கொண்டிருந்தார்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்துள்ள சேப்பாக்கம் மணிமுத்தாறு பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த செங்கலப்பட்டு பணிமனைக்கு சொந்தமான அரசுப்பேருந்து ஆடுகள் மீது அசுர வேகத்தில் மோதியது. இதில் 96 செம்மறி ஆடுகள் உடல் சிதறி உயிரிழந்தன. 50க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளது. ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்த லெட்சுமணன் மீதும் பேருந்து மோதியதில் அவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அந்த அரசு பேருந்து பின்னால் வந்த அதே பணிமனையைச் சேர்ந்த மற்றொரு பேருந்து மற்றும் தனியார் பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிஷ்டவசமாக சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு வந்த வேப்பூர் போலீஸார் லெட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் சாலையில் சிதறிக்கிடந்த செம்மறி ஆடுகளை அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்த போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.