9,500 கிலோ எடை, 6.5 மீட்டர் உயரம்... பிரதமரால் திறந்துவைக்கப்பட்ட தேசிய சின்னம்!

9,500 கிலோ எடை, 6.5 மீட்டர் உயரம்... பிரதமரால் திறந்துவைக்கப்பட்ட தேசிய சின்னம்!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூறையில் அமைக்கப்பட்டுள்ள நான்கு சிங்கங்களுடன் இருக்கும் தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார்.

வெண்கலத்தால் ஆன இந்த தேசிய சின்னம் 9,500 கிலோ எடையும், 6.5 மீட்டர் உயரமும் கொண்டது. இது புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மைய முகப்பின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய சின்னத்தை தாங்கும் வகையில் சுமார் 6,500 கிலோ எடையுள்ள இரும்பு பீடமும் கட்டப்பட்டுள்ளது என்று அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தை அமைப்பதற்கான திட்ட வரைபடம், செயல்முறை, களிமண் மாதிரி, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொடங்கி வெண்கல வார்ப்பு மற்றும் மெருகூட்டல் வரை இதுவரை எட்டு கட்ட தயாரிப்பு பணிகளை இது கடந்து வந்துள்ளது.

இந்த நிகழ்வின் போது, புதிய ​​பிரமாண்டமான நாடாளுமன்றக் கட்டிடத்தை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். பிரதமர் கலந்து கொண்ட பூஜையை தொடர்ந்து தேசிய சின்னம் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய பாராளுமன்ற கட்டட திட்டத்திற்கு ரூ.1,250 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் கட்டுகிறது. ராஷ்டிரபதி பவனில் அருகாமையில் 13 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த நான்கு மாடி கட்டிடம், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in