
பொதுமக்களிடம் ஆசைவார்த்தைக் கூறி 9 ஆயிரம் கோடி ரூபாயை சுருட்டிய நிதிநிறுவன அதிபர்கள் 15 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து புகைப்படங்களை வெளியிட்டது காவல்துறை. மேலும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களை தொடங்கி, பங்குச்சந்தை, ஆன்லைன் வர்த்தகம், நிலங்களில் முதலீடு மற்றும் தங்க நகைகள் வாங்கி விற்பனை செய்தல் போன்ற தொழில்களில் ஈடுபடுவதாக கூறி, தங்களுடன் இணைந்து முதலீடு செய்தால் குறைந்த காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசைகாட்டி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு மிகப்பெரிய மோசடியில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம், எல்.என்.எஸ் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் நிறுவனம் மற்றும் ஹிஜாவு அசோசியேட் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்த நிறுவனங்கள் பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்தில் சுமார் 10% முதல் 25% வரை வட்டி வழங்குவதாக அறிவித்து, பொதுமக்களிடம் இருந்து பணத்தைப் பெறுவதற்காக முகவர்கள் மற்றும் ஊழியர்களை நியமனம் செய்து, பல்வேறு மாவட்டங்களில் ஆடம்பர நட்சத்திர விடுதிகளில் கூட்டங்கள் நடத்தி ஆசைவார்த்தைகளால் மக்களை ஈர்த்து கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்று வட்டியும், அசலும் தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளன. இந்த மோசடி நிறுவனங்கள் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் சென்னை பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தில் 1,09,255 லட்சம் பொதுமக்கள் 2438 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது போலீஸார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேர் தலைமறைவாக உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் எல்.என்.எஸ் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் என்ற நிதி நிறுவனத்தில் நடத்திய சோதனையில் கிடைக்க பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் 1 லட்சம் பேர் இந்நிறுவனத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்துள்ளது தெரிய வந்துள்ளதாகவும், இவ்வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளிகள் 4 பேர் தலைமறைவாக உள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையிலும் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸார் நவம்பர் மாதம் 8-ம் தேதி வழக்குப்பதிவு செய்து அந்நிறுவனத்திற்குச் சொந்தமான 21 இடங்களில் சோதனை நடத்தி திரட்டப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 4500 பேரிடமிருந்து இந்நிறுவனம் சுமார் 600 கோடி ரூபாய் வரை முதலீடு பெற்று மோசடி செய்தது தெரியவந்துள்ளதாகவும், தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருப்பதால் முதலீட்டாளர்கள் மற்றும் முதலீடு செய்த தொகை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ள காவல்துறை இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 2 முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த மோசடி நிறுவனங்களின் உரிமையாளர்கள் பலர் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதால் இண்டர்போல் உதவியுடன் ரெட்கார்னர் நோட்டீஸ் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் இந்த 3 பெரிய நிதி நிறுவன மோசடிகள் தொடர்பாக மேற்கொண்டு புகார் அளிக்க தனித்தனியாக மின்னஞ்சல் முகவரிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மூன்று மோசடி வழக்குகளிலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளின் புகைப்படங்களை தமிழக காவல்துறை தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவு குற்றவாளிகள் குறித்து தகவல்கள் தெரிந்த பொதுமக்கள் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளரை அணுகி தகவல் தெரிவிக்குமாறு தமிழக காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், பொதுமக்கள் அளிக்கும் தகவல் உறுதியானதாக இருப்பின் சம்மந்தப்பட்டவர்களுக்கு தக்க சன்மானமும், ரொக்கப் பரிசும் வழங்கப்படும் எனவும், தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தைகள் கூறி மோசடியில் ஈடுபடும் நிறுவனங்களை நம்பி பொதுமக்கள் பணத்தை இழக்காமல் ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் தங்கள் பணத்தை முதலீடு செய்து பயனடையுமாறும் தமிழக காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.