ஸ்பைஸ்ஜெட் விமானிகள் போயிங் 737 மேக்ஸ் விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டது ஏன்?

ஸ்பைஸ்ஜெட் விமானிகள் போயிங் 737 மேக்ஸ் விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டது ஏன்?

அமெரிக்காவில் தயாராகும் போயிங் 737 மேக்ஸ் வகை விமானங்களை இயக்க, ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தைச் சேர்ந்த 90 பேருக்குத் தடை விதித்திருக்கிறது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம். இந்தியாவில் இந்த வகை விமானங்களை இயக்கும் ஒரே நிறுவனம் ஸ்பைஸ்ஜெட் மட்டும்தான் என்பதால் இந்நடவடிக்கை கவனம் ஈர்த்திருக்கிறது.

மேக்ஸ் வகை சிமுலேட்டர் சாதனத்தில் முறையான பயிற்சி எடுத்துக்கொள்ளாமல் இந்த வகை விமானங்களை இயக்கக் கூடாது என அறிவுறுத்தியிருக்கும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் தலைவர் அருண் குமார், இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருக்கிறார்.

காரணம் என்ன?

2019 மார்ச் மாதம், எத்தியோப்பியாவின் அடிஸ் அபபா அருகே, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த போயிங் 737 மேக்ஸ் வகை விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 4 இந்தியர்கள் உட்பட 157 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்திய விமான நிறுவனங்கள் பயன்படுத்திவந்த போயிங் 737 மேக்ஸ் வகை விமானங்கள் வானில் பறக்க தடை விதிக்கப்பட்டது.

பின்னர், போயிங் நிறுவனம் தனது விமானங்களின் மென்பொருளில் திருத்தங்கள் மேற்கொண்டதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் அந்தத் தடையை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நீக்கியது. மேக்ஸ் சிமுலேட்டர் மூலம் பயிற்சி மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் அந்தத் தடை நீக்கப்பட்டது.

சமாளிக்க முடியுமா?

இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கமளித்திருக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், “ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் போயிங் 737 மேக்ஸ் விமானங்களை இயக்க, 650 விமானிகள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். தற்போது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விதித்திருக்கும் தடைகளின் அடிப்படையில் 90 விமானிகளுக்கு மீண்டும் பயிற்சியளிக்கப்படும். அதேசமயம், போயிங் 737 வரிசையின் மற்ற விமானங்களை இயக்க இந்த விமானிகல் அனுமதிக்கப்படுவார்கள்” என்று கூறியிருக்கிறார்.

மேலும், “இந்தத் தடையால், மேக்ஸ் விமானங்களை இயக்குவதில் பாதிப்பு ஏற்படாது. தற்போது இவ்வகையைச் சேர்ந்த 11 விமானங்களை ஸ்பைஸ்ஜெட் இயக்குகிறது. இவற்றை இயக்க 144 விமானிகள் தேவை. பயிற்சி பெற்ற 650 விமானிகளில் 560 பேர் இந்த விமானங்களை இயக்குவதற்குப் போதுமானவர்கள்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.