திருச்சி சிறப்பு முகாமில் இருந்த 9 இலங்கை தமிழர்கள் கைது; என்ஐஏ அதிரடி நடவடிக்கை: நடந்தது என்ன?

திருச்சி சிறப்பு முகாமில்  இருந்த 9 இலங்கை தமிழர்கள் கைது; என்ஐஏ  அதிரடி நடவடிக்கை: நடந்தது என்ன?

திருச்சி சிறப்பு முகாமில் இருந்த இலங்கைத் தமிழர்கள் 9 பேர் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு இலங்கை, வங்காளதேசம், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த இந்திய வாழ் தமிழர்கள் உட்படபாஸ்போர்ட் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இலங்கையைச் சேர்ந்த குணசேகரன், புஷ்பராஜ், முகமது யாஸ்மின், கோட்டா காமினி, ஸ்டான்லி கென்னடி பெர்னான்டோ, தனுக்கா ராஜன், லாடியா, வெள்ள சாரங்கா, திலீப் ஆகியோர் பாஸ்போர்ட் மற்றும் சில வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ள இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். 

கடந்த ஜூன் 8-ம் தேதி என்ஐஏ அதிகாரிகள் இச்சிறப்பு முகாமில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது இங்குள்ளவர்கள் பயன்படுத்தி வந்த செல்போன், லேப்டாப், மோடம் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மற்றும் லேப்டாப்களை ஆய்வு செய்ததில் அவற்றைச் சட்டவிரோதமான செயல்களுக்கு அவர்கள் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.  குறிப்பாக சமீப காலமாக இலங்கை மற்றும் லட்சத்தீவுகளில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் திருச்சிக்கு நேற்று  வந்த தேசிய புலனாய்வு முகமை  எஸ்.பி தர்மராஜ் தலைமையிலான அதிகாரிகள், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 9 பேரை கைது செய்ய திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரினார். 

முறையான ஆவணங்கள் மற்றும் 9 பேர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் என்ஐஏ அதிகாரிகளிடம்  கேட்டிருந்தார். சுமார் நான்கு மணி நேர அவகாசத்தில்  அந்த  ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம்  என்ஐஏ அதிகாரிகள் சமர்ப்பித்தனர்.  அதனைத் தொடர்ந்து ஆட்சியர் அனுமதி அளித்தார்.

அதன் பின்னர் நேற்று இரவு திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமிற்கு சென்று இலங்கை வாழ் தமிழர்கள் 9 பேரையும்  கைது செய்து பலத்த பாதுகாப்புடன் வேனில் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த இலங்கை தமிழர்கள் ஒன்பது பேரையும்  பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,  புழல் சிறையில் அடைக்க அழைத்துச் செல்வதாக அதிகாரிகள்  தெரிவித்தனர்.

தேசிய புலனாய்வு சிறப்பு முகமை அதிகாரிகள் திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் முகாமிட்டு 9 பேரை கைது செய்து  கொண்டு சென்றது திருச்சியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in