பட்டாசு தயாரிக்கும் மூலப்பொருட்களை பதுக்கிய 9 பேர் கைது: தொடர் விபத்தால் சிவகாசியில் போலீஸ் அதிரடி

பட்டாசு தயாரிக்கும் மூலப்பொருட்களை பதுக்கிய 9 பேர் கைது: தொடர் விபத்தால் சிவகாசியில் போலீஸ் அதிரடி

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும் மூலப்பொருள்களில் ஒன்றான கருந்திரியை பதுக்கிவைத்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு பல பட்டாசு ஆலைகளில் அவ்வப்போது வெடிவிபத்துகள் நிகழ்வதும், உயிர் சேதம் ஏற்படுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனால் அரசு, இங்கு பட்டாசுக்கான மூலப்பொருள்களை பதுக்கி வைப்பதையும் தடை செய்துள்ளது.

இந்த நிலையில் விருதுநகர் எஸ்.பி சீனிவாசப் பெருமாள் உத்தரவின்பேரில் அருப்புக்கோட்டை கூடுதல் டி.எஸ்.பி அருண்காரத் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிவகாசியில் பட்டாசு ஆலைகளில் கருந்திரி பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. தெற்குத் தெரு, சின்ன புளியம்பட்டி, பெரிய புளியம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆறேகால் டன் அளவுக்கு பட்டாசு தயாரிக்க மூலப்பொருள்களில் பயன்படுத்தும் கருந்திரி கைப்பற்றப்பட்டது. இவற்றின் சந்தை மதிப்பு எட்டரை லட்சம் ஆகும்.

இதில் கருந்திரியை பதுக்கி வைத்திருந்த கணேசன், முருகேஸ்வரி, பாண்டி கணேசன், பாலமுருகன், வீரராஜன், ராமசாமி, லோகநாதன், செல்வராஜ், விஜயகுமார் ஆகிய 9 பேரைக் கைது செய்தனர். இதேபோல் மற்றப் பகுதிகளிலும் ஆய்வுகள் தொடரும் எனவும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in