நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் 9 மசோதாக்கள் நிறைவேற்றம்: எவையெவை தெரியுமா?

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

நேற்றுடன் முடிவடைந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் 9 மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7-ம் தேதி தொடங்கியதில் இருந்து நடைபெற்ற 13 அமர்வுகளில், மக்களவையில் 9 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மக்களவையில் ஏழு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஒன்பது மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, 2022-23-ம் ஆண்டிற்கான மானியங்களுக்கான துணை கோரிக்கைகளின் முதல் தொகுதி மற்றும் 2019-20-ம் ஆண்டிற்கான அதிகப்படியான மானியத்திற்கான கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு, அது தொடர்பான ஒதுக்கீட்டு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன என்று தெரிவித்தார்.

குளிர்கால கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்கள்: வனவிலங்கு பாதுகாப்பு திருத்த மசோதா - 2022, எரிசக்தி பாதுகாப்பு திருத்த மசோதா -2022, டெல்லி நடுவர் மன்றம் திருத்த மசோதா-2022, அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை (இரண்டாவது திருத்தம்) மசோதா -2022, கடல்சார் கடற்கொள்ளை எதிர்ப்பு மசோதா -2022, அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை (இரண்டாவது திருத்தம்) மசோதா -2022 மற்றும் அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை (நான்காவது திருத்தம்) - 2022 ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டு இறுதிக் கொண்டாட்டங்களுக்காக உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கைகளைத் தொடர்ந்து குளிர்கால கூட்டத்தொடர் ஒரு வாரம் குறைக்கப்பட்டது. அதன்பின்னர் இரு அவைகளும் வெள்ளிக்கிழமையுடன் ஒத்திவைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in