
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி கோயம்புத்தூர் சிறையில் இருந்த ஆறுபேரும், ஏற்கனவே கைதான மூன்றுபேர் இருக்கும் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணைக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த அக்டோபர் 23 -ம் தேதி காரில் குண்டுவெடித்தது. இதில் காரில் இருந்த ஜமேஜா முபின்(28) என்பவர் உயிர் இழந்தார். முபினுக்கு உடந்தையாக குற்றச்சம்பவத்திற்கு துணைபுரிந்த அவரது நண்பர்கள் அப்சர்கான், முகமது அசாருதீன், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய ஆறுபேரை போலீஸார் கைது செய்து இருந்தனர். இந்த ஆறுபேரும் கோயம்புத்தூர் சிறையில் இருந்துவந்தனர்.
இந்த ஆறுபேரிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விசாரணைக்காக இவர்கள் அடிக்கடி சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் கோயம்புத்தூரில் இவர்கள் தொடர்பான வழக்கின் விசாரணை முற்றாக முடிந்துவிட்டது. இதனால் இவர்களும் புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர். ஏற்கெனவே கோவை கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஜமேஜா முபினின் கூட்டாளிகள் மூன்றுபேர் புழல் சிறையில் இருந்தனர். இந்நிலையில் புழல் சிறையில் இவ்வழக்கில் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.