8-ம் வகுப்பு மாணவிக்கு ஓராண்டாக பாலியல் வன்கொடுமை: கராத்தே மாஸ்டர் கைது

உதயகருணாநிதி
உதயகருணாநிதி

கராத்தே கற்றுக் கொள்ள வந்த 8-ம் வகுப்பு மாணவியை ஒரு வருடமாக பாலியல் வன்கொடுமை செய்த கராத்தே மாஸ்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவி, புத்தாண்டு தினத்தன்று காணாமல் போனார். இதனால் அவரது பெற்றோர் மற்றும் கராத்தே மாஸ்டர் உதயகருணாநிதி ஆகியோர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், சில மணி நேரத்தில் சிறுமி வீடு திரும்பியுள்ளார்.

இதையடுத்து அவரை அழைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வரும் கோபி என்ற இளைஞருடன் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக அந்த மாணவி, மெரினா கடற்கரைக்குச் சென்றுள்ளார். இதன் பின் தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியதாக தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் ,மாணவியிடம் நடத்திய தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவி, கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டின் அருகே உள்ள கராத்தே பள்ளியில் பயிற்சி எடுத்து வந்துள்ளார். அந்த பள்ளியை நடத்தி வரும் கராத்தே மாஸ்டர் உதய கருணாநிதி(43) சுமார் 30-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கராத்தே பயிற்சி கொடுத்து வந்துள்ளார். கடந்த ஓராண்டாக கராத்தே மாஸ்டர் தொடர்ந்து மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை செய்து வந்தது. அத்துடன் அவருக்கு 200 ரூபாய் கொடுத்து நடந்தது பற்றி வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார்.

அவரிடமிருந்து தப்பிப்பதற்காக கோபி என்ற இளைஞரிடம் பழகியதாகவும், புத்தாண்டு தினத்தின் போது சிறுமியைக் காணவில்லை என மாணவியின் பெற்றோர் போலீஸாரிடம் சென்றதால், தான் சிக்கி கொள்வோம் என்பதை அறிந்த கராத்தே மாஸ்டர் உதய கருணாநிதியும், அக்கறை உள்ளவர் போல நாடகமாடி அவர்களுடன் சேர்ந்து புகார் அளிக்க வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் கராத்தே மாஸ்டர் உதய கருணாநிதியை பிடித்து விசாரணை நடத்தினர். திருமணமாகாத உதய கருணாநிதி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. மேலும் மாணவியை தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கராத்தே மாஸ்டர் போலீஸாரிடம் கூறியதைக் கேட்டு அதிர்ந்து போனார்கள். இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in