
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வங்கியில் பணத்தை போடுவதற்காக எடுத்துச் சென்ற டாஸ்மாக் சூப்பர்வைசரை அரிவாளால் வெட்டிவிட்டு, அவரிடம் இருந்த எட்டரை லட்ச ரூபாயை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியுள்ளது முகமூடி கும்பல்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள வீதிவிடங்கன் பகுதியில் அரசு மதுபானக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மதுபான கடையில், விளமல் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மகன் தட்சணாமூர்த்தி(53) சூப்பர் வைசராகப் பணியாற்றி வருகிறார்.
மது விற்பனையின் மூலம் கிடைக்கும் பணத்தை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நன்னிலம் கொண்டு சென்று அங்குள்ள வங்கியில் பணத்தை செலுத்துவார். அதற்கு தன்னுடைய இரு சக்கர வாகனத்தை பயன்படுத்துவார். அப்படி நேற்று பணத்தை எடுத்துக்கொண்டு வீதிவிடங்கனில் இருந்து ஸ்ரீவாஞ்சியம் வழியாக நன்னிலம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.
அப்போது அவர் வரும் வழியில் காத்திருந்த முகமூடி அணிந்த இரு நபர்கள் அவரை வழிமறித்து, அரிவாளால் கையை வெட்டியுள்ளனர். காயத்துடன் தவித்த அவரிடமிருந்து 8 லட்சத்து 45 ஆயிரம் பணத்தை பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
வெட்டுப்பட்டு ரத்தவெள்ளத்தில் தவித்துக் கொண்டிருந்த அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து, உடனடியாக வாகனத்தில் ஏற்றி அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த நன்னிலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் அறிந்ததும் நன்னிலம் மற்றும் திருவாரூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அடைத்து அதன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.