5-வது நாளாக ஆழ்துளைக் கிணற்றில் தவிக்கும் சிறுவன்: 80 மணி நேரமாக நீளும் மீட்புப்பணி

5-வது நாளாக ஆழ்துளைக் கிணற்றில் தவிக்கும் சிறுவன்: 80 மணி நேரமாக நீளும் மீட்புப்பணி

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் 11 வயது சிறுவன், தனது வீட்டின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான். அந்த சிறுவனை மீட்கும் பணிகள் கடந்த 80 மணி நேரமாக நடந்து வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் ஜான்ஜ்கிர் சம்பா மாவட்டத்தில் உள்ள பிஹ்ரிட் கிராமத்தில், கடந்த ஜூன் 10-ம் தேதி 80 ஆடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன் ராகுல் சாஹூவை மீட்கும் பணிகள் 80 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. மீட்புப்பணிகள் தொடர்பாக பேசிய ஜான்ஜ்கிர் மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர சுக்லா, "விரைவில் சிறுவன் மீட்கப்படுவான் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறுவனின் உடல்நிலை நன்றாக உள்ளது. மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் வீடியோ அழைப்பு மூலம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறார்" என்று கூறினார்.

மீட்புப்பணிகளை 150 அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மாநில பேரிடர் மீட்புப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் ராணுவம் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வெள்ளிக்கிழமை முதல் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மீட்புப்பணிகள் தொடர்பாக ட்வீட் செய்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், “மீட்புப் பணி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. தரையில் தோண்டும் போது பாறை கண்டுபிடிக்கப்பட்டதால் சிறுவனை வெளியே கொண்டுவர இன்னும் கூடுதல் நேரம் ஆகும். இருப்பினும், கடந்த மூன்று நாட்களாக ஆழ்துளை கிணற்றைச் சுற்றி எதிரொலிக்கும் என்டிஆர்எஃப் வீரர்களின் குரல்கள் ராகுலின் நம்பிக்கையாகத் தொடர்கின்றன. இன்று அதிகாலை 5 மணிக்கு, அவர் வாழைப்பழம் சாப்பிட்டார்” என்று தெரிவித்திருந்தார்

முதல்வர் பூபேஷ் பாகேல் ஆள்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனின் குடும்பத்தினருடன் தொலைபேசியில் இரண்டு முறை பேசி நம்பிக்கை அளித்துள்ளார். சிறுவன் விழுந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு பக்கவாட்டில் ஒரு மீட்புக்குழி தோண்டப்பட்டு வருகிறது. மண்சரிவு மற்றும் பாறைகள் காரணமாக இதில் தாமதம் ஏற்படுவதால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in