
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுமியைக் கடத்திக் குடும்பம் நடத்திய வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகர்கோவில் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், கண்ணன்கோடு பகுதியைச் சேர்ந்த செங்கல் சூளை அதிபர் ஒருவருக்கு சொந்தமாக சில லாரிகளும் உள்ளன. இதில் இரவிபுதூர்கடையைச் சேர்ந்த முருகேசன் என்ற முருகன்(29) வேலைசெய்து வந்தார். இவர் தினமும் செங்கல் சூளை அதிபரின் வீட்டிற்கும் அவரைச் சந்திக்கச் செல்வார். அப்போது தொழிலதிபரின் 14 வயது மகளிடமும் பேசுவார். அதில் அவர்களுக்குள் பழக்கம் இருந்தது.
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் வேலை செய்யும் தொழிலதிபரின் வீட்டிற்குக் காரில் வந்த முருகேசன். தொழிலதிபரின் 14 வயது மகளைக் கடத்திச் சென்றுவிட்டார். அவரது காரில் மேலும் மூன்றுபேரும் இருந்தனர். சிறுமி சப்தம் போட, குடும்பத்தினர் திரண்டனர். அதற்குள் காரை எடுத்துக்கொண்டு திருவனந்தபுரம் சென்ற முருகேசன், ரயில் வழியாக மைனர் பெண்ணையும் மும்பைக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தினார். தொடந்து சென்னைக்கு அழைத்துவந்து உறவினர் வீட்டிலும் சேர்ந்து வாழ்ந்தார். இந்த நிலையில் சிலநாள்களில் அங்கிருந்து தப்பித்துவந்த அந்த சிறுமி குமரி மாவட்டத்தில் உள்ள தன் வீட்டுக்கு வந்தார். இதுதொடர்பாக குழித்துறை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணையும் நடத்திவந்தனர். இதில் முருகேசன் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப்ராஜ் இன்று தீர்ப்பு கூறினார். இதில் சிறுமியைக் கடத்திய முருகேசனுக்கு 8 ஆண்டுகள் சிறையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.