கோடிக்கணக்கில் சொத்துக்கள்; கொட்டிக்கிடக்கும் வைரங்கள்: சகலமும் துறந்து சன்னியாசியான சிறுமி!

தேவன்ஷி
தேவன்ஷி

வைர வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் கோடீஸ்ரர் குடும்பத்தில் பிறந்த சிறுமி, இன்று துறவறம் பூண்டிருக்கிறார்.

’சங்வி அன்ட் சன்ஸ்’ என்பது குஜராத் மாநிலம் சூரத்தை தலைமையிடமாகக் கொண்டும் உலகெங்கும் கிளைகள் பரப்பியுள்ள பிரபல வைரம் விற்பனை நிறுவனமாகும். இதன் உரிமையாளரான தனேஷ் சங்வியின் மூத்த மகள் தேவன்சி சங்வி. 8 வயதாகும் இந்த சிறுமிக்கு, பெற்றோர் தனேஷ் - ஆமி மேற்பார்வையில் இன்று துறவறத்துக்கான ஆன்மிக வைபவம் அரங்கேறியது.

தற்போது 8 வயதாகும் சிறுமி தேவன்சி, அடுத்த 10 வருடத்தில் குடும்பத்தின் வைர வர்த்தகத்தின் தலைமை பொறுப்புக்கு நகர்ந்திருப்பார். இது தவிர பல கோடிக்கணக்கான சொத்துக்களும், சுகபோக வாழ்க்கையும் அவருக்கு வாய்த்திருக்கும். இத்தனையையும் துறந்து சன்னியாசம் பெற்றிருக்கிறார் தேவன்சி.

பெற்றோருடன் தேவன்ஷி
பெற்றோருடன் தேவன்ஷி

துறவறம் மேற்கொள்வதற்கான முன்னோட்டமாக சுமார் 600கிமீ தொலைவுக்கு, மூத்த துறவிகளுடன் தேவன்சி ஆன்மிக பயணம் மேற்கொண்டிருக்கிறார். தேவன்சியின் சுய விருப்பத்தின் பேரில் இந்த துறவற முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறும் பெற்றோர், மேற்படி நீண்ட ஆன்மிக பயணத்தின் மூலம் அதனை தேவன்சி உறுதி செய்ததாகவும் பெருமிதம் தெரிவிக்கின்றனர். துறவற வாழ்க்கையின் அனைத்து சிரமங்களையும் இந்த பயணம் தேவான்சிக்கு உணர்த்திய பின்னரும், அவர் பிடிவாதமாக சன்னியாச முடிவை எடுத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

பாடல் பாடவும், பரத நாட்டியம் ஆடவும் முறைப்படி பயிற்சி பெற்றிருக்கும் தேவான்சி, இந்தி, குஜராத்தி, மார்வாரி, சமஸ்கிருதம் மற்றும் ஆங்கில மொழிகளை கற்றுத் தேர்ந்தவர். இதுவரை அவர் தொலைக்காட்சியே பார்த்ததில்லை என்றும், திருமணம், விருந்து உள்ளிட்ட நிகழ்வுகள் எதிலும் பங்கெடுத்ததில்லை என்றும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். மேலும் இதுவரை 367 சன்னியாச தீட்சை நிகழ்வுகளில் பங்கேற்று இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமண மதத்தை பின்பற்றும் குடும்பங்களில் இந்த இளம் வயது துறவறங்கள் சாதாரணம் என்றபோதும், 8 வயது சிறுமிக்கு என்ன புரியும் என்ற விமர்சனங்களும் பொதுவெளியில் எழுந்துள்ளன. துறவறத்தை தானாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவருக்கு வாய்த்திருக்குமா என்றும் அவருக்கு பெற்றோரால் துறவறம் திணிக்கப்பட்டதா என்றும் அந்த விமர்சனங்கள் தொடர்கின்றன. ஆயினும், மதம் மற்றும் இறை நம்பிக்கை தொடர்பான தனிப்பட்ட குடும்பத்தின் முடிவில் எவரும் தலையிடுவதாக இல்லை. தனேஷ் சங்கி - அமி தம்பதிக்கு வாரிசுகளாக, தேவன்சி தவிர்த்து காவ்யா என்ற 5 வயது மகளும் உள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in