400 அடி ஆழ்துளை கிணற்றில் சறுக்கிய சிறுவன்: மீட்பு பணி தீவிரம்

400 அடி ஆழ்துளை கிணற்றில் சறுக்கிய சிறுவன்: மீட்பு பணி தீவிரம்

மத்திய பிரதேச மாநிலத்தில் 400 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க மாநில பேரிடர் மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர்.

பேதுல் மாவட்டம் மாண்டவி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. நேற்று(டிச.7) மாலை தன்மய் சாஹூ என்ற 8 வயது சிறுவன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்தபோது, அப்பகுதியில் இருந்த சரியாக மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். உடனிருந்த சிறுவர்கள் ஓடோடி பெரியவர்களிடம் தெரிவித்ததில், உடனடியாக மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. இரவே மாநில பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்தோரும் சிறுவனை மீட்பதில் இணைந்தனர்.

சிறுவன் மூச்சு விடுவதை உறுதி செய்த அவர்கள், 400 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றின் 55 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருப்பதாக கணித்துள்ளனர். கிணற்றின் ஆழம் அதிகம் என்பதால் சிறுவன் மேலும் சறுக்கி செல்வது மீட்பு பணியை சவாலாக்கி வருகிறது. இரவுக்குள் 40 அடி வரை நெருங்கிவிட்ட மீட்பு குழுவினர் சிறுவனை பத்திரமாக மீட்கவும், அவன் மேலும் கிணற்றுக்குள் சரியாது இருக்கவும் போராடி வருகின்றனர்.

மாநில முதல்வரான சிவராஜ் சிங் சௌகான் மீட்பு நிலவரத்தை நிமிடந்தோறும் தனக்கு அப்டேட் செய்யும்படி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘சிறுவனின் மீட்பு பணிகளில் தீவிரம் காட்டுமாறு உள்ளூர் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். தொடர்ந்து அவர்களிடம் தொடர்பில் உள்ளேன். சிறுவனின் நலத்துக்காக பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in