தலா 1 லட்சம் கொடுத்து கடல் பயணம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் 8 பேர் தனுஷ்கோடி வருகை

அகதிகளாக வந்தவர்கள்
அகதிகளாக வந்தவர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 8 பேர் இன்று அதிகாலை தமிழகத்திற்கு வந்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 22-ம் தேதி இலங்கை, கிளிநொச்சியில் இருந்து 4 குழந்தைகள் உட்பட 8 தமிழர்கள் படகு மூலம் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர்.

இந்நிலையில், மீண்டும் இலங்கையில் இருந்து 5 குழந்தைகள் உட்பட 8 பேர் இன்று அதிகாலை தனுஷ்கோடி ஒன்றாம் மணல் திட்டில் இறங்கியுள்ளனர். இது குறித்து அப்பகுதி மீனவர்கள் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் மண்டபம் கடலோரக் காவல்படை மற்றும் கியூ பிரிவு காவல்துறையினர் தனுஷ்கோடியில் உள்ள கடலோரக் காவல்படை காவல்நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், யாழ்பாணத்தைச் சேர்ந்த வசந்தகுமார் மனைவி ஜெயந்தினி, இவரது 10 வயது மகள் இனியா மற்றும் 9 வயது மகன் ஹரி ஹரன், 4 வயது மகன் தனுசன் மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மனைவி இந்துமதி, ராமச்சந்திரன் மகன் சசிகுமார், இவரது 7 வயது மகன் மோஹித் மற்றும் 9 வயது மகள் சுபிஸ்கா என்றும் தெரிய வந்துள்ளது. இவர்கள் 8 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், இவர்கள் தலா 1 லட்சம் கொடுத்து கள்ளத்தோணி மூலம் தலைமன்னார் கடல் பகுதிக்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து, இவர்கள் மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in