மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காதவர்கள் 8 லட்சம் பேர்: இன்று கடைசி தேதி

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது அவசியம்
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது அவசியம்மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காதவர்கள் 8 லட்சம் பேர்: இன்று கடைசி தேதி

மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. நேற்று மாலை வரை 8 லட்சம் பேர் இணைக்காமல் உள்ளனர். எனவே, இன்று ஒரு நாளில் இவ்வளவு பேரும் ஆதார் எண்ணை இணைப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலை மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின்நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இலவசம், மானியம் பெறும் மின் நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்வாரியம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த இணைப்புப் பணிக்காக, தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டன. ஆனால், பெரும்பாலான மின்நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கவில்லை. இதையடுத்து, கூடுதல் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்ற மின் நுகர்வோரின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை மின் வாரியம் காலக்கெடுவை நீட்டித்தது. அதன்பிறகு, பிப்ரவரி 15-ம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை வரை 2.59 கோடி மின்நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளனர். சுமார் 8 லட்சம் பேர் இன்னும் இணைக்கவில்லை.

இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"முதல்வரின் வழிகாட்டுதலின்படி, தமிழக மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், துவங்கப்பட்ட மின் இணைப்புடன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், நேற்று மாலை வரை 2.59 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இது மொத்தமுள்ள 2.67 கோடி வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி, விவசாய இணைப்புகளில் 97.07 சதவீதமாகும் ஆகும். இதுவரை இணைத்திடாதவர்கள், கடைசி நாளான இன்று மாலைக்குள் விரைந்து இணைத்திட வேண்டுகிறேன்" என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று ஒரே நாளில் 8 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்து விடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in