50 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து கோர விபத்து: 8 ஐயப்ப பக்தர்கள் பலி

50 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து கோர விபத்து: 8 ஐயப்ப பக்தர்கள் பலி

தேனி - குமுளி இடையேயான மலைச்சாலையில் ஐயப்ப பக்தர்கள் தரிசனம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கார் கவிழ்ந்ததில் தமிழகத்தைச் சேர்ந்த எட்டு ஐயப்ப பக்தர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், சண்முகசுந்தரபுரம் கிராமத்தைச் சேர்ந்த பத்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனத்திற்கு சென்று இருந்தனர். தரிசனம் முடிந்து நேற்று இரவு 11.30 மணியளவில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர். இவர்களது கார் தேனி - குமுளி வழித்தடத்தில் இரைச்சல் பாலம் அருகே வந்தது. அப்போது நிலைதடுமாறி, சாலையில் இருந்து விலகி 50 அடி பள்ளத்தில் கார் பாய்ந்தது. இதில் விபத்துக்குள்ளான கார், முல்லைப்பெரியாறு நீர் செல்லும் தண்ணீர் குழாய்க்குள் சிக்கிக் கொண்டது.

விபத்து நடந்தது கேரள எல்லை என்பதால் கேரள தீயணைப்புப் படையினரும், தமிழக போலீஸார், தீயணைப்புப் படையினரும் சேர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இதில் 9 வயது சிறுவன் உள்பட 8 ஐயப்ப பக்தர்கள் பலியாகினர். விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆண்டிப்பட்டி தேவதாஸ், நாகராஜ், சிவக்குமார். சண்முக சுந்தரபுரம் வினோத், சக்கம்பட்டி முனியாண்டி, மறவப்பட்டி கன்னிசாமி உள்ளிட்டோர் எனத் தெரியவந்தது. இந்த விபத்தில் மேலும், இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in