சபரிமலையில் சுற்றித் திரிந்த 75 காட்டுப்பன்றிகள்,61 பாம்புகளைப் பிடித்த வனத்துறை: பக்தர்கள் நிம்மதி

சபரிமலை
சபரிமலை

சபரிமலை மண்டல மகரவிளக்கு தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. விரதம் இருந்து, இருமுடிகட்டி வரும் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்வகையில் சபரிமலையில் காட்டுப்பன்றி, பாம்புகளைப் பிடித்து வனத்துறையினர் அகற்றிவருகின்றனர்.

பிடிபட்ட காட்டுப்பன்றி
பிடிபட்ட காட்டுப்பன்றி

சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு தரிசனத்தை முன்னிட்டு கடந்த மாதம் 16-ம் தேதி மாலையில் நடை திறக்கப்பட்டது. இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில், சபரிமலை சன்னிதானம் பகுதியில் அனைத்துத் துறைகளின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பக்தர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ளன.

இதில் வனத்துறையினரும் முனைப்பு காட்டினர். இந்த மகரவிளக்கு சீசனில் இதுவரை சன்னிதானம் பகுதியில் சுற்றித்திருந்த 75 காட்டுப்பன்றிகள் கூண்டுவைத்துப் பிடித்து அகற்றப்பட்டன. இந்த பன்றிகள் கவி உள்ளிட்டப் பகுதிகளில் கொண்டுவிடப்பட்டன. அதேபோல் சன்னிதானம் பகுதியில் மட்டும் இதுவரை 61 பாம்புகள் பிடிபட்டன. இவற்றையும் வனத்துறையினர் பத்திரமாக பக்தர்கள் வரும் வழித்தடத்தில் இல்லாத அடர்ந்த காட்டுப்பகுதியில் சென்றுவிட்டுள்ளனர்.

இதேபோல் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் பாதையையே பெரும்பாலான பக்தர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இருந்தும் சில பக்தர்கள் பெருவழிப்பாதை வழியாக எருமேலி, புலிமேடு வழியாக சன்னிதானம் வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்வகையில் இந்த வனப்பாதைகளும் அதி நவீன கருவிகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதேபோல் பக்தர்கள் குரங்கு,மலை அணில் உள்பட எந்த வனவிலங்குகளைப் பார்த்தாலும் உணவிட வேண்டாம். இயற்கையின் தேடலில் அவையே உணவைத் தேடி நுகர்ந்து கொள்ளும். ஒரு பக்தர் உணவுகொடுத்து பழக்கிவிட்டுச் சென்றால் பின் ஒவ்வொரு பக்தருக்கும் அது தொல்லையாகவும், பிராணிகளின் எதிர்பார்ப்பாகவும் மாறிவிடும் எனவும் பத்தனம்திட்டா மாவட்ட வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in