வெள்ளத்தில் மூழ்கித் தவிக்கும் அசாம்... 73 பேர் உயிரிழப்பு; 43 லட்சம் பேர் பாதிப்பு

வெள்ளத்தில் மூழ்கித் தவிக்கும் அசாம்... 73 பேர் உயிரிழப்பு; 43 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக இரண்டு போலீஸார் உட்பட 73 பேர் உயிரிழந்துள்ளனர். 5000 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அசாமில் வெள்ளப்பெருக்கு அபாயகரமானதாக இருப்பதால், மொத்தமுள்ள 35 மாவட்டங்களில் 33 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் கிட்டத்தட்ட 43 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

மாநிலத்தில் நிலவும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமையன்று 73 ஆக அதிகரித்துள்ளது. நாகோன் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் பொறுப்பாளர் மற்றும் ஒரு காவலர் ஆகிய இருவரும் மீட்புப்பணி தொடர்பாக சென்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் இன்று அதிகாலையில் மீட்கப்பட்டதாக மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவல்களின்படி, 33 மாவட்டங்களில் உள்ள 127 வருவாய் வட்டங்கள் மற்றும் 5,137 கிராமங்கள் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள 744 நிவாரண முகாம்களில் 1.90 லட்சம் பேர் தஞ்சமடைந்துள்ளனர். முகாம்களுக்குச் செல்லாத பாதிக்கப்பட்ட மக்களுக்கு 403 தற்காலிக மையங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. தேசிய பேரிடர் மீட்புக்குழு, மாநில பேரிடர் மீட்புக்குழு, காவல்துறை மற்றும் பிற ஏஜென்சிகள் மூலமாக இதுவரை வெள்ளத்தில் சிக்கிய சுமார் 30,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய நீர் ஆணைய அறிக்கையின்படி, கோபிலி ஆறு, நாகோன் மாவட்டத்தில் கம்பூர், நிமதிகாட்டில் பிரம்மபுத்திரா, தேஜ்பூர், கவுகாத்தி, கம்ரூப், கோல்பாரா மற்றும் துப்ரி ஆகிய இடங்களில் அதிக அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சுபன்சிரி, பக்லாடியா, மனாஸ், பெக்கி பராக் மற்றும் குஷியாரா ஆறுகள் அபாய அளவை தாண்டி பாய்கின்றன. வெள்ளம் காரணமாக காசிரங்கா தேசிய பூங்காவில் ஏழு மான்கள் மற்றும் ஒரு சிறுத்தை நீரில் மூழ்கி உயிரிழந்தன. பல விலங்குகள் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டன என அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in