ஒரே சிரிஞ்சில் 700 பேருக்கு ஊசி?: திருப்பூரில் போலி பெண் டாக்டர் கைது

கோகிலா.
கோகிலா.

பல்லடம் அருகே நோயாளிகளுக்கு ஒரே சிரிஞ்சில் மருந்துகள் செலுத்தி சிகிச்சை அளித்த போலி பெண் மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் குப்புசாமி நாயுடுபுரத்தில் ஒரு மருந்தகம் இயங்கி வந்தது. இங்கு போலி மருத்துவர் சிகிச்சை அளிப்பதாக சுகாதார நலப்பணி துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் கனகராணி தலைமையில் குழுவினர் அந்த மருந்து விற்பனை கடையில் ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த கோகிலா என்பவர் மருந்து கடையின் பின்புறம் தனி அறையில் நோயாளிகளுக்கு, ஊசி மருந்து செலுத்தி வந்தது தெரியவந்தது. மருத்துவ ஆய்வு குழுவினரிடம் முதலில் அவர் தன்னை மருத்துவர் என கூறி அறிமுகமாகியுள்ளார். அதன் பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் குப்புசாமி நாயுடுபுரம் லட்சுமி மில்ஸ் பகுதியைச் சேர்ந்த சின்னராசு என்பவரின் மனைவி என்பதும் , . பிளஸ் 2 மட்டுமே முடித்த நிலையில் இந்த தொழிலில் கடந்த 8 ஆண்டுகள் வரை ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

இது தொடர்பாக ஆய்வில் ஈடுபட்ட மருத்துவக் குழுவினர் கூறுகையில், "மருந்து கடைக்கு வரும் நோயாளிகளுக்கு ஊசி போடுவதும், காயங்களுடன் வருபவர்களுக்குக் கட்டுப்போட்டு விடுவதும், மருந்துகளைக் கொடுப்பதையும் செய்து வந்துள்ளார். உரிய அனுமதி இன்றி, கல்வித் தகுதியின்றி ஆங்கில மருந்துகளைக் கொண்டு அலோபதி மருத்துவம் பார்த்துள்ளார். அதே போல் ஒரே சிரஞ்சில் பலருக்கும் ஊசிகளை மட்டும் ஊசி போட்டுள்ளார். இது மிகவும் ஆபத்தான விஷயமாகும். மருத்துவமனையின் பின்புறம் 700 ஊசிகளுக்கு மேல் கைப்பற்றினோம். ஆனால் சிரிஞ்சுகள் இல்லை" என்று குழுவினர் கூறினர்.

இதையடுத்து போலி மருத்துவர் கோகிலா மீது பல்லடம் போலீஸாரிடம், தேசிய நல குழுமம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அருண்பாபு புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து கோகிலாவை போலீஸார் கைது செய்தனர். மேலும், தனியார் மருந்து விற்பனை கடையைப் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in