சரக்கு லாரியில் கஞ்சா வருகிறது; ரகசிய தகவலால் அலர்ட்டான போலீஸ்: சிக்கினர் படையப்பா கூட்டாளிகள்

சரக்கு லாரியில் கஞ்சா வருகிறது; ரகசிய தகவலால் அலர்ட்டான போலீஸ்: சிக்கினர் படையப்பா கூட்டாளிகள்

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட 700 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள போலீஸார் கடத்திச் சென்ற மூவரை கைது செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து அவற்றை பறிமுதல் செய்யவும், கஞ்சா வியாபாரிகளை கண்டறிந்து கைது செய்யவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போதைப் பொருட்கள் ஒழிப்பிற்கு தீவிர முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

பேராவூரணி பகுதியில் கஞ்சா நடமாட்டம் அதிகம் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு பேராவூரணி பகுதியில் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருந்தனர். அப்போது அந்த வழியாக சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே பேராவூரணி காவல் ஆய்வாளர் செல்வி மற்றும் போலீஸார் உதவியுடன் தனிப்படையினர் பேராவூரணி அருகே பின்னவாசல் பகுதியில் வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு உட்படுத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சிறிய ரக சரக்கு வாகனம் ஒன்று வேகமாக வந்தது. அதை தடுத்து நிறுத்திய தனிப்படையினர் சோதனை செய்தபோது அதில் பொட்டலம், பொட்டலமாக கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சரக்கு வாகனத்தை பேராவூரணி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். சரக்கு வாகனத்தையும் அதிலிருந்த 700 கிலோ அளவுக்கான கஞ்சா பொட்டலங்களையும் தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்த சரக்கு வாகனத்தில் வந்த ரமேஷ் குமார், படையப்பா, சிதம்பரம் ஆகிய மூன்று பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கஞ்சா பொட்டலங்கள் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்துள்ள தனிப்படை போலீஸார் இந்த கஞ்சா எங்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது? இதனை வாங்கி விற்பவர்கள் யார் யார்? என்ற விவரங்களை மூவரிடமும் விசாரித்து வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா பேராவூரணி சென்று மூவரிடமும் விசாரணை மேற்கொண்டார். மேலும் கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படையினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

700 கிலோ கஞ்சா சாதாரணமாக சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in