
உத்தமபாளையம் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி 63 பேரிடம் 50 லட்சம் பணமோசடி செய்தவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே காமாட்சிபுரத்தில் மலைச்சாமி என்பவர் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தினார். இத்திட்டத்தில் சேர்ந்தால் கழிவுத்தொகை அதிகம் கிடைக்கும் என விளம்பரம் செய்தார். இதனை நம்பி ஏராளமானோர் இவரிடம் மாதாந்திர ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்தனர்.
கடந்த 2015 -ம் ஆண்டு மாத ஏலச்சீட்டில் சேர்ந்தவர்களுக்கு இவர் தவணைக் காலம் முடிந்த நிலையில் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இது தொடர்பாக டேவிட் என்பவர் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாரளித்தார். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் மலைச்சாமியிடம் 63 பேர் ரூ.50 லட்சத்து 46 ஆயிரத்து 430 முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தது தெரிய வந்தது.
டேவிட் கொடுத்த புகாரின் பெயரில் மலைச்சாமி மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. இன்று இறுதி விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து குற்றவாளி மலைச்சாமிக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கோபிநாத் தீர்ப்பளித்தார்.