போலீஸ்காரர் கைது
போலீஸ்காரர் கைதுதாறுமாறாக ஜீப் ஓட்டியதில் 7 வாகனங்கள் சேதம்: போதை போலீஸ்காரர் கைது!

தாறுமாறாக ஜீப்பை ஓட்டியதில் 7 வாகனங்கள் சேதம்: போதை போலீஸ்காரர் கைது!

ராணிப்பேட்டையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி பொதுமக்களின் கார், பைக் உள்ளிட்ட 7 வாகனங்களைச் சேதப்படுத்திய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆவலூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிபவர் ஸ்ரீதர். இவர் தமிழ்நாடு கமாண்டோ பயிற்சிப் பள்ளிக்குச் செல்வதற்காக போலீஸ் ஜீப்பில் சககாவலர் அருள்மணி என்பவரோடு சென்றார். ஜீப்பை ஸ்ரீதர் ஓட்டிச் சென்றார்.

விருகம்பாக்கம் பகுதியில் இருந்து புறப்பட்ட அந்த ஜீப் அசோக் நகர் பகுதியில் சென்றபோது தாறுமாறாக ஓடியது. அப்போது அங்கு சாலையில் சென்று கொண்டிருந்த மற்றும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 5 மோட்டார் சைக்கிள்கள், ஒரு சைக்கிள், ஒரு கார் மீது ஜீப் மோதியது. இதில் அந்த வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கிண்டி போக்குவரத்துப் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் விசாரணை மேற்கொண்ட போது காவலர் ஸ்ரீதர் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீதரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துப்போய் பரிசோதனை மேற்கொண்டனர். அதில் அவர் மதுபோதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு போதையில் போலீஸ் ஜீப் ஓட்டிய காவலர் ஸ்ரீதரை கிண்டி போக்குவரத்துப் போலீஸார் கைது செய்தனர். போதையில் வாகனம் ஓட்டி பொதுமக்கள் வாகனங்களைச் சேதப்படுத்திய போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in