
பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு 7 டன் அளவிலான கரும்பு, மஞ்சள், வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன.
கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும் விமான சேவை இயக்கப்படுகிறது. இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஷார்ஜா மற்றும் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் பண்டிகையை கொண்டாட உதவும் வகையில் கோவையில் இருந்து விமானத்தில் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் அனுப்பப்பட்டன.
இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ``கோவை - ஷார்ஜா இடையே இயக்கப்படும் விமானத்தில் ஒவ்வொரு முறையும் 2.5 டன் முதல் 3 டன் எடையிலான சரக்குகள் கொண்டு செல்லப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஷார்ஜா விமானத்தில் சரக்குகளை குறைத்துக் கொண்டு கரும்பு கொண்டு செல்ல புக்கிங் செய்யப்பட்டது.
கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 8-ம் தேதியிலிருந்து கரும்பு அனுப்பப்பட்டது. முதல் நாளில் 600 கிலோ கரும்பு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதிலிருந்து 5 நாட்களில் மொத்தம் 15 டன் எடையிலான சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் 5 டன் கரும்பு மற்றும் 2 டன் வெல்லம், மஞ்சள், வாழை இலை உள்ளிட்ட பொருட்கள் அடங்கும். இந்த பொருட்கள், மதுரை, தேனி, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டு விமானம் மூலம் ஷார்ஜாவுக்கு அனுப்பப்பட்டது" என்று தெரிவித்தனர்.