அரை நிர்வாணமாக ஓடவிட்டு சீனியர்கள் ராகிங்: வைரல் வீடியோவால் 7 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சஸ்பெண்ட்

அரை நிர்வாணமாக ஓடவிட்டு சீனியர்கள் ராகிங்: வைரல் வீடியோவால் 7 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சஸ்பெண்ட்

புதிதாகச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களை சீனியர் மாணவர்கள் அரை நிர்வாணமாக விடுதி வளாகத்தில் ஓடவிட்ட வீடியோ வெளியானதை தொடர்ந்து, அதில் தொடர்புடைய மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்.

வேலூரில் பிரபல கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் சமீபத்தில் தொடங்கியது. முதலாம் ஆண்டு மாணவர்கள் விடுதியில் தங்கிப் படித்து வரும் நிலையில் கடந்த மாதம் அவர்களை சீனியர் மாணவர்கள் அரை நிர்வாணமாக விடுதி வளாகத்தில் ஓடச் சொல்லி ராகிங் செய்துள்ளனர்.

இதை சிலர் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் கல்லூரியின் கமிட்டிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கடிதம் ஒன்று வந்துள்ளது. பெயர் குறிப்பிடாமல் வந்த அந்த கடிதத்தில், "மாணவர்கள் தங்கும் விடுதியில் புதிதாகச் சேர்ந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆடைகளைக் களைந்து விடுதி வளாகத்தை நடந்து சுற்றி வர வைத்து சீனியர் மாணவர்கள் கொடுமைப்படுத்துகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த கடிதம் சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. உடல் ரீதியாக எவ்வாறு துன்புறுத்தப்பட்டோம் என்பதை அந்த மாணவர்களே தங்களது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவையும் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோவில், மாணவர்கள் உள்ளாடையோடு கல்லூரியின் தங்கும் விடுதியைச் சுற்றி ஓட விட்ட காட்சிகள் இருக்கின்றன. மாணவர்கள் ஓடும் போது, அவர்கள் மீது தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இந்த வீடியோ வெளியாகி மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இதைத் தொடர்ந்து ‘இதுபோன்ற ராக்கிங் செயல்களை ஒருபோதும் நிர்வாகம் சகித்துக் கொள்ளாது. விசாரணை நடந்து வருகிறது, அதற்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என சி.எம்.சி கல்லூரி  முதல்வர் சாலமன் சதீஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ராகிங் செய்த 7 மாணவர்களைக் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லியில் இருக்கும் ராகிங் தடுப்புப் பிரிவுக்குப் புகார் வந்து இருப்பதாக தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பலகலைக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீதும்,  விடுதி வார்டன் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in