தமிழகத்துக்கு வரும் இலங்கைத் தமிழர்களின் வருகை அதிகரிப்பு: 7 பேர் தனுஷ்கோடி வந்தனர்

தனுஷ்கோடி வந்த இலங்கைத் தமிழர்கள் ஏழு பேர்
தனுஷ்கோடி வந்த இலங்கைத் தமிழர்கள் ஏழு பேர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஏழு பேர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடியை அரசாங்கம், விரைந்து சரி செய்ய வேண்டும் என்று இலங்கைத் தலைநகர் கொழும்பில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சூழலில், அங்கு நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அங்கிருந்து அகதிகளாக தமிழகம் வரக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இலங்கைத் தமிழர்கள் படகில் மூலம் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், இன்று தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சல்முனையில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஏழு இலங்கைத் தமிழர்கள் நின்றிருந்தனர்.

இவர்களைக் கண்ட தனுஷ்கோடி நாட்டுப்படகு மீனவர்கள் உடனே மண்டபம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், கடலோர காவல்துறையினருக்கு மண்டபம் காவல்துறை அளித்த தகவலின் பேரில் ஹோவர்கிராஃப்ட் மூலம் கடலோர காவல்துறை தனுஷ்கோடி விரைந்தது. அங்கிருந்து ஏழு இலங்கைத் தமிழர்களையும் மீட்டு மண்டபத்துக்கு அழைத்து வந்தனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மேரி அகஸ்டா (44), இவரது மகன்கள் நிசர்கான் ஆகாஷ் (16), கெவின் (12) மற்றும் திரிகோணமலையைச் சேர்ந்த மகேசன் (39), இவரது மனைவி தேவி (38), மகன்கள் தினேஷ் (10), ஹமூசன் (6) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, இவர்கள் விசாரணைக்கு பின் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in