மாதவிடாய் காலத்தில் தனது மனைவியைக் கட்டிப்போட்டு அந்த ரத்தத்தை எடுத்து அகோரி பூஜைக்கு விற்பனை செய்த கணவன் உள்பட அவரது குடும்பத்தினர் 7 பேரை போலீஸார் கைது செய்துள்ள அதிர்ச்சியான சம்பவம் மகாராஷ்டிராவில் நடைபெற்றுள்ளது-
மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 28 இளம்பெண் தன்னை கணவர் மற்றும் மாமியார், மைத்துனர் மற்றும் மருமகன் உள்ளிட்ட 7 பேர் கொடுமைப்படுத்துவதாக போலீஸில் புகார் செய்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு பீட் மாவட்டத்தில் தனக்கு திருமணம் நடந்ததில் இருந்து உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கணவர், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், மாதந்திரம் மூன்று நாட்கள் பட்டினி போட்டு கட்டி வைத்து மாதவிடாய் ரத்தத்தை சேகரித்து அகோரி பூஜை நடத்தும் ஒருவருக்கு விற்பனை செய்வதாக அவர் புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், இளம்பெண் புகார் கூறியது உண்மை எனத்தெரிய வந்தது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், " மாதவிடாய் காலத்தில் அந்த இளம்பெண்ணிண் கை, கால்களைக் கட்டிப்போட்டு பின்னர் பருத்தி துணியால் அவளது மாதவிடாய் ரத்தத்தை சேகரித்து மாந்தீரிக, சூனிய வேலை செய்பவர்களிடம் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இளம்பெண்ணின் கணவர், அவரது தாய் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து விஷ்ராந்த்வாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்று கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.